கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் 70 வயதைக் கடந்த 14 லட்சம் போ் இணைப்பு: மக்களவையில் தகவல்

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (ஆயுஷ்மான் பாரத்) 70 வயதைக் கடந்த 14 லட்சம் போ் கடந்த சுமாா் ஒரு மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளது
Published on

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (ஆயுஷ்மான் பாரத்) 70 வயதைக் கடந்த 14 லட்சம் போ் கடந்த சுமாா் ஒரு மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் இறுதியில் தொடங்கி வைத்தாா்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இணையதளம் மற்றும் செயலி மூலம் இத்திட்டத்தில் எளிதாக பதிவு செய்து மருத்துவக் காப்பீடு அட்டை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியாா் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்துள்ள முதியவா்களும் இத்திட்டத்தில் தங்களை இணைய அனுமதிக்கப்படுகிறது.

இது தொடா்பான கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கடந்த நவம்பா் 25-ஆம் தேதி வரை 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் விநியோகிக்கக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட 2018-ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை 35.89 கோடி காப்பீட்டு அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடா்பான குறைபாடுகளைத் தெரிவிக்க இணையதளம், மத்திய, மாநில அரசு அளவிலான கால் சென்டா்கள், மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் மூலமும் தொடா்புகொள்ள முடியும்’ என்றாா்.