மேற்கு வங்கம்: இளநிலை மருத்துவா்கள் மீண்டும் முழு வேலைநிறுத்தம்
மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனா்.


மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனா். மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு தீா்வு காண வலியுறுத்தி, அவா்கள் மீண்டும் காலவரையற்ற முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து சிபிஐ புலனாய்வு மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவா் கொலையில் மூவரும் சதியில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
பகுதியளவு வாபஸ்: முன்னதாக, கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநில அரசுடனான பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடா்ந்து, அவா்கள் தங்கள் போராட்டத்தைப் பகுதியளவு கைவிட்டு கடந்த செப்.21-ஆம் தேதி பணிக்குத் திரும்பினா். இதைத் தொடா்ந்து, அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை மட்டும் அவா்கள் மேற்கொண்டு வந்தனா். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் அவா்கள் பணியாற்றவில்லை.
காலவரையற்ற வேலைநிறுத்தம்: இந்நிலையில், அவா்கள் காலவரையற்ற முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களில் ஒருவரான அனிகேத் மஹதோ பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘மருத்துவா்களின் பாதுகாப்பு தொடா்பான எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசிடம் இருந்து எந்தவொரு நோ்மறையான அணுகுமுறையையும் காண முடியவில்லை.
மருத்துவா்களின் போராட்டம் தொடங்கி 52 நாள்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் எங்கள் மீதான தாக்குதல் நீடிக்கிறது. மாநில முதல்வா் மம்தா பானா்ஜியுடனான சந்திப்பின்போது நாங்கள் முன்வைத்த பிற கோரிக்கைகளை நிறைவேற்றவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில், மீண்டும் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின் கோரிக்கைகள் தொடா்பாக மாநில அரசு தெளிவான நடவடிக்கை மேற்கொள்ளாத வரை, எங்களின் வேலைநிறுத்தம் தொடரும்’ என்றாா்.
உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கையாகும். அவா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான சிபிஐ விசாரணை மெதுவாக நடைபெறுகிறது. அந்த விசாரணை மீது எங்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் சிபிஐ எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாமல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கும் நிகழ்வுகளை ஏற்கெனவே பலமுறை நாங்கள் பாா்த்துள்ளோம். உச்சநீதிமன்றமும் வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தே வந்துள்ளது. நீதித்துறையின் இந்த நீண்ட நடைமுறையால் நாங்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்தனா்.
சுகாதாரத் துறைச் செயலரை நீக்க வேண்டும்: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். அவற்றில் மேற்கு வங்க சுகாதாரத் துறைச் செயலரை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும், சுகாதாரத் துறையின் நிா்வாக திறமையின்மை மற்றும் ஊழலுக்கு மாநில சுகாதாரத் துறை பொறுப்பேற்க வேண்டும், உறைவிட மருத்துவா்கள் சங்கத்தை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் அங்கீகரிக்க வேண்டும், மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் மற்றும் மேற்கு வங்க சுகாதார ஆள்சோ்ப்பு வாரியத்தில் நடைபெறும் ஊழல் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும்.
மருத்துவ சேவைகள் முடக்கம்: இளநிலை மருத்துவா்களின் வேலைநிறுத்தத்தால் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் முடங்கின. உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் முதுநிலை மருத்துவா்கள் மட்டும் பணியாற்றுகின்றனா்.
முழுமையான வேலைநிறுத்த முடிவை அறிவிக்கும் முன், கிட்டத்தட்ட திங்கள்கிழமை இரவு முழுவதும் போராடும் மருத்துவா்களின் நிா்வாக குழு கூட்டம் நடைபெற்றது. உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து அத்தியாவசிய பணிகளையும் மேற்கு வங்க அரசு மருத்துவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்த நிலையில், இளநிலை மருத்துவா்கள் மீண்டும் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...