இப்படியும் ஒரு குடும்பமா..! 630 லிட்டர் ரத்த தானம் அளித்துள்ள குடும்பம்

3 தலைமுறைகளைச் சேர்ந்த 16 பேர், 50-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம்
இப்படியும் ஒரு குடும்பமா..! 630 லிட்டர் ரத்த தானம் அளித்துள்ள குடும்பம்
Published on
Updated on
1 min read

குடும்ப உறுப்பினர்கள் சிலர் 100 முறைக்கும் மேல் ரத்த தானம் அளித்திருப்பது பிரமிக்கச் செய்கிறது. குஜராத்தை சேர்ந்ததொரு கூட்டுக்குடும்பம் இதுவரை 630 லிட்டர் ரத்த தானம் அளித்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

44 வயதான டாக்டர் படேலின் குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சேர்ந்த 16 பேர், 50-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் அளித்துள்ளனர். குறிப்பாக, டாக்டர் படேல், குஜராத்தில் 100 முறைக்கும் மேல் ரத்த தானம் அளித்தவர்கள் பட்டியலில் இளம் வயதைச் சேர்ந்தவராக இணைந்துள்ளார்.

இதுவரை, 98 முறை ரத்த தானம் அளித்துள்ள படேலின் தந்தை அசோக் படேல்(72), தாயார் சகுந்தலாவும் (71) தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றனர். “இந்தியாவில் 65 வயதுக்கு மேல் ரத்த தானம் செய்ய முடியாது. இந்நிலையில், படேலின் பெற்றோர் ஒரு வாரத்துக்கு முன், அமெரிக்கா சென்று ரத்த தானம் அளித்து வந்துள்ளனர்” என்ற தகவலும் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது.

இதற்கெல்லாம், பிள்ளையார்சுழி போட்டவர் டாக்டர் படேலின் மூத்த பெரியப்பாவான ரமேஷ் படேல்.

1985-ஆம் ஆண்டு, சத்ய சாய் பாபாவின் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ரமேஷ் படேலிடம், சத்ய சாய் பாபாவின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்.. “ரத்தம் என்ற திரவ வடிவிலும் நாம் அன்பை வெளிப்படுத்தலாம். அது பிறரிடமும் பாயட்டும்” என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டு, மாபெரும் ரத்ததான முகாமை ஏற்பாடு செய்தார் ரமேஷ் படேல். அதன்மூலம், ரத்த தட்டணுக்கள் குறைபாடு பிரச்னையை எதிர்கொண்ட தலசேமியா நோயாளிகளுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அப்போது ரத்தம் வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, படேலின் குடும்பத்தினர் தாமாகவே முன் வந்து ரத்த தானம் அளிக்கத் தொடங்கி இன்று வரை தொடர்கின்றனர்.

படேலின் குடும்பத்தில், 3 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் வீட்டிலேயே ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. அதில் படேல் குடும்பத்தினரின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்து வருகின்றனர்.

ரமேஷ் படேலுக்கு இப்போது 76 வயதாகிறது. வயது முதிர்வால் ரமேஷ் ரத்த தானம் அளிப்பதை கடந்த சில ஆண்டுகளுகு முன் நிறுத்திவிட்டார்.

படேல் குடும்பத்தில் 27 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 1,400 யூனிட் ரத்தம்(630 லிட்டர்) தானமாக வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக, 100 முறைக்கும் மேல் ரத்த தானம் அளித்தவர்கள் இருக்கும் நகரமாக குஜராத்தின் அகமதாபாத் திகழ்கிறது. அகமதாபாத்தில் 130 பேர் 100 முறைக்கும் மேல் ரத்த தானம் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com