

புது தில்லி: காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளை யொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்க பதிவில், காமராஜரின் விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு கொள்கைகள் தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறினார்.
"தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜர் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலிகள். அவரது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் அதிகாரம் நாடு முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் மற்றும் போற்றப்படும்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தில்லி ராஜ்காட் மற்றும் விஜய் காட் ஆகிய இடங்களில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
1903 ஜூலை 15 இல் தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதியில் எளிய குடும்பத்தில் பிறந்த குமாரசாமி காமராஜர், தந்தையின் இறப்புக்கு பின்னர் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பன்னிரண்டு வயதில், மாளிகை கடைக்கு வேலைக்கு சென்றார். இதனிடையே ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது அவருக்கு வயது பதினைந்து. நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார்.
1936-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-இல் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-இல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-இல் மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947-இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-இல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-இல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும்,1969 மற்றும் 1971 இல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தார். 1963 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகி கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை 'காமராஜர் திட்டம்' என்று அறியப்பட்டது. நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்பட்டார்.
திருமணம் செய்து கொள்ளமால் தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பத்த காமராஜர், எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்த காமராஜர்,
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் நாளில் 1975-இல் காலமானார்.
1976 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு இறப்புக்குப் பின் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.