1968 விமான விபத்து: ராணுவ வீரரை அடையாளம் காட்டிய துண்டுச்சீட்டு! என்ன இருந்தது தெரியுமா?

1968 விமான விபத்தில் உயிரிழந்து, உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ராணுவ வீரரை அடையாளம் காட்டிய துண்டுச் சீட்டு
நாராயண் சிங் உடல்
நாராயண் சிங் உடல்
Published on
Updated on
2 min read

டேஹ்ராடூன்: 56 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விமான விபத்தில் சிக்கியவரின் உடலை அடையாளம் காண உதவியிருக்கிறது ஒரு துண்டுச் சீட்டு.

1968ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் ஏஎன்-12 விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 56 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ராணுவ வீரரை பாக்கெட்டிலிருந்த ஒரு துண்டுச் சீட்டுத்தான் துருப்புச்சீட்டாக மாறிய சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகே 56 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப் படையின் ஏஎன்-12 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியின்போது, கடந்த வாரம் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனை இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

நான்கு உடல்களில் ஒரு வீரர் அணிந்திருந்த சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஒரு துண்டுச் சீட்டில், நாராயண் சிங் என்றும், அந்தப் பெயருக்கு அருகே அவரது மனைவி வசந்தி தேவி என்றும் கைப்பட எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துண்டுச் சீட்டின் அடிப்படையில், விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் பெயர்களில் தேடியபோது, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாராயண் சிங் என்பதும், இந்திய ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து உடல்கூறாய்வு முடிந்து, அவரது உடல் சொந்த கிராமத்துக்கு சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு செல்லப்பட்டது.

இத்தனை காலமும் என்னவானார் என்று தெரியாமல் துயரத்தில் இருந்த நாராயண் சிங் குடும்பத்தினரும் கிராம மக்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதியாக நாராயண் சிங் உடல் அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை காலை வந்துவிட்டது.

நாராயண் சிங்கின் உடல் கிடைத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசிய போது, அவரது குடும்பத்தினர் உணர்வுப்பெருக்கால் அழுதிருக்கிறார்கள். எங்கள் பாரம்பரியமான வீட்டுக்கு அவரது உடலை எடுத்துச் சென்று பிறகு, எங்கள் குடும்பத்துக்கான நதிக்கரையில் அவரது இறுதிச் சடங்கை செய்வோம் என்கிறார்கள் உறவினர்கள்.

நாராயண் சிங் திருமணமானதும், ராணுவத்துக்குத் திரும்பியிருக்கிறார். பிறகு விபத்தில் சிக்கி அவரது உடல் கூட கிடைக்காத நிலையில், மனைவி வசந்தி தேவி, நாராயண் சிங்கின் உறவினரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்குப் பிறந்த ஜெய்வீர் சிங், தற்போது நாராயண் சிங்குக்கு இறுதிச் சடங்குகளை செய்ய விருக்கிறார். வசந்தி தேவி 2011ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதாகவும், நாராயண் - வசந்திக்கு 1962ஆம் ஆண்டு திருமணமாகியிருக்கிறது. இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மறு திருமணம் செய்துகொண்ட வசந்திக்கு 7 பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1968, பிப்ரவரி 7-இல் சண்டீகரிலிருந்து லேவுக்கு 102 பயணிகளுடன் சென்ற இந்திய விமானப் படையின் (ஐஏஎஃப்) ஏஎன்-12 போக்குவரத்து விமானம் காணாமல் போனது. அந்த விமானம் ரோஹ்தாங் மலைக் கணவாய் அருகே விபத்துக்கு உள்ளானது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய விமானத்தைத் தேடும் பணியில் இந்திய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன. இந்நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டில் சேதமடைந்த நிலையில் இருந்த விமானத்தின் பாகங்களை அடல் பிஹாரி வாஜ்பாயி மலையேற்ற நிறுவனத்தின் குழு கண்டறிந்தது. அதன்பிறகு, இந்திய ராணுவம், குறிப்பாக டோக்ரா படை உள்ளிட்டவை விபத்தில் சிக்கியவா்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையை தொடங்கின.

அந்த வகையில் 2005, 2006, 2013, 2019-ஆம் ஆண்டுகளில் கடும் பனி சூழ்ந்த மலைப் பகுதிகளில் டோக்ரா படை தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 பேரின் உடல்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டன. அதன்பிறகு எந்த உடல்களும் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, தற்போது மீண்டும் ஹிமாசல பிரதேசத்தில் உள்ள சந்திரபாகா மலைப்பகுதியில் டோக்ரா படை, திராங்கா மீட்புப்படை மற்றும் இந்திய ராணுவம் ஒன்றிணைந்து சோதனையில் ஈடுபட்டபோது 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.

மீட்கப்பட்ட நான்கு உடல்களில் மூன்று பேரின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சோ்ந்த தாமஸ் சரண் என்பவா் உடல் மீட்கப்பட்டது குறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவா் மல்கான் சிங் என அதிகாரபூா்வ ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய நாராயண் சிங்கின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவா் குறித்து இதுவரை தகவல் இல்லை.

அண்மையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களும் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. ஒருவரது உடலை மருத்துவ ரீதியாக அடையாளம் காணும் பணியும் தொடங்கியருக்கிறது. நீண்டகாலமாக தேடுதல் பணியை மேற்கொண்டு வந்த இந்திய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com