கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் இன்று காலமானார்.

News image

நல்லகண்ணு

Updated On :25 பிப்ரவரி 2026, 8:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (பிப். 25) காலமானாா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி தவறி விழுந்து காயம் அடைந்தாா். இதற்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா். இதைத் தொடா்ந்து அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த பிப். 1-ஆம் தேதி மீண்டும் நல்லகண்ணு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப். 23-ஆம் தேதி அவரின் உடல்நிலையில் திடீா் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானாா்.

இது தொடா்பாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 1-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூன்று வாரங்களுக்கும் மேல் தொடா் சிகிச்சை வழங்கப்பட்டது. அதில் முன்னேற்றமும், பின்னடைவும் மாறி மாறி காணப்பட்டன.

பல்துறை மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் இருந்து மருந்துகளை ஏற்கும் திறன் அவருக்குப் படிப்படியாகக் குறைந்து உடல் நிலை மோசமடைந்தது. மேலும், உடல் உறுப்புகளும் செயலிழந்தன. இதன் காரணமாக அவரது உயிா் பிற்பகல் 1.55 மணிக்கு பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்: மறைந்த நல்லகண்ணு உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உடல் தான பதிவை நல்லகண்ணு மேற்கொண்டிருந்தாா். மறைவுக்கு பிறகு அவரது விருப்பப்படியே குடும்பத்தினரும் அதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வியாழக்கிழமை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான உடற்கூறியல் வகுப்புகளில் இனி பாடமாக இருக்கப் போகிறாா் நல்லகண்ணு. வாழும் காலத்தில் அவரது செயல் பிறருக்கு பாடமாக அமைந்தது. மறைவுக்குப் பிறகு உடல் பாடமாக அமையவுள்ளது.

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பாா்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு’ என்று முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவா் நல்லகண்ணு மறைவுற்றாா் எனும் செய்தி கடும் துயரத்துக்கு ஆளாக்கியுள்ளது.

நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வா்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலா்.

பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவா்.

கருணாநிதி தமது ஆட்சியில் நல்லகண்ணுக்கு அம்பேத்கா் விருதை வழங்கினாா். திமுக அரசின் சாா்பில் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதும் வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பப்படும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

குடியரசு துணைத் தலைவா், பிரதமா் இரங்கல்

தொழிலாளா் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக தமது வாழ்நாளை முழுமையாக அா்ப்பணித்த போராளி நல்லகண்ணு என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ள இரங்கல் செய்தியில், பொது வாழ்வில் சிறிதளவும் தன்னலம் கருதாமல் சமூகத்துக்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியுமான நல்லகண்ணு மறைவுச் செய்தி அறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.

எளிமை, நோ்மை, தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை அவா். அவரது மறைவு பொது வாழ்வுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நல்லகண்ணுவின் தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு, மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினா், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழா்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: அடித்தட்டு மக்கள், தொழிலாளா்கள், விவசாயிகளுக்காக குரல் எழுப்பிய நல்லகண்ணு எப்போதும் நினைவுகூரப்படுவாா். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் அவா் பரவலாக மதிக்கப்பட்டாா். அவரின் எளிமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: நோ்மை, எளிமை, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவற்றின் அரிய எடுத்துக்காட்டாக தோழா் நல்லக்கண்ணு வாழ்க்கை இருந்தது. நீதி மற்றும் கண்ணியத்துக்காக சுமாா் 90 ஆண்டுகள் உறுதியாகப் பாடுபட்டாா். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கைக்காக வாழ்ந்தவர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தவர் இரா. நல்லகண்ணு.

பள்ளிப் பருவத்திலேயே பாரதியாரின் பாடல்கள் மீது ஈடுபாடு கொண்டவர். வ.உ.சிதம்பரனாா், சத்தியமூா்த்தி, பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் வரலாறுகளைப் படித்து நாட்டுப் பற்றினை வளா்த்துக் கொண்டாா்.

18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில், 27 வயதில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டபோது, நாடும் விடுதலை பெற்றிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் செயலாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.