அகமதாபாத்: பழிக்குப் பழியாக, தந்தையைக் கொன்றவரை அதே பாணியில் மகன் கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது தந்தையை வாகனத்தில் இடித்துக் கொன்ற நபரை, 22 ஆண்டுகள் காத்திருந்து, அதேப்போன்று டிரக்கை ஏற்றிக் கொலை செய்த 30 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இளைஞர் 8 வயதாக இருந்தபோது, தந்தை மீது வாகனத்தை மோதிக் கொன்ற நபரை பழிக்குப் பழி தீர்க்க 22 ஆண்டுகள் காத்திருந்த இளைஞர் பற்றி அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பேசி வருகிறார்கள்.
தல்தேஜ் பகுதியைச் சேர்ந்தவர் நக்கத் சிங் (50), செவ்வாய்க்கிழமை மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, டிரக் மோதி பலியானார்.
முதலில், இது சாலை விபத்து என்றுதான் காவல்துறையினர் நினைத்திருந்தனர். ஆனால், முதற்கட்ட விசாரணையில், இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டக் கொலை என்பது தெரிய வந்தது. சுமார் 22 ஆண்டுகாலமாக, கோபால் சிங், நக்கத்தைக் கொலை செய்ய காத்திருந்ததும், தனது தந்தை எவ்வாறு கொலை செய்யப்பட்டாரோ அதேபோல கொலையாளியையும் கொன்று முடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
2002ஆம் ஆண்டு, கோபால் தந்தை ஹரி சிங், ஜெய்சல்மரில் வசித்து வந்த போது, டிரக் மோதி பலியானார். இந்த வழக்கில், நக்கத் மற்றும் அவரது நான்கு சகோதரர்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றனர்.
இந்த சம்பவம் நடந்த போது, கோபாலுக்கு எட்டு வயது. தனது தந்தையைக் கொன்றவர்களை கொலை செய்ய வேண்டும் என்று அவர் துடித்துக்கொண்டிருந்தார். தற்போது, நக்கத், ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த நிலையில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை அதே டிரக்கைக் கொன்று கோபால் இடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோபால் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு விசாரணையின்போதுதான் அந்த டிரக்கை கோபால் கடந்த வாரம் தான் வங்கியில் கடன் பெற்று வாங்கியது தெரிய வந்தது.
மேலும், கோபாலின் செல்போனை அடிப்படையாக வைத்து, அவர் நக்கத்தை ஒரு வாரமாக பின்தொடர்ந்து வந்து எப்போது கொலை செய்வது என திட்டமிட்டதும் தெரிய வந்தது.
பிறகுதான், கோபால் மற்றும் நக்கத் கிராமங்களுக்கு இடையே பல ஆண்டுகாலமாக இருக்கும் பகையும், அதன் தொடர்பாக நிகழும் கொலைகள் பற்றிய தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோபால் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.