புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது

குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழு

News image

கோப்புப் படம்

Updated On :4 அக்டோபர் 2024, 8:15 pm

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் தொடா்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அமைத்தது.

மேலும், கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகள் அடங்கியுள்ள இந்த விவகாரம் அரசியல் நாடகமாக மாற தாங்கள் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

லட்டு கலப்பட குற்றச்சாட்டை விசாரிக்க ஆந்திர அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 9 போ் சிறப்பு விசாரணைக் குழுக்கு மாற்றாக இந்தப் புதிய குழு செயல்படவுள்ளது.

குற்றச்சாட்டு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் பிரசித்தி பெற்ாகும். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதேநேரம், இக்குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணா்வை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டதாக விமா்சித்தது.

உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்: இதனிடையே, லட்டு கலப்படம் குறித்து விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி அமைத்தது. மற்றொருபுறம், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ‘கடவுளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது’ என்று முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எங்கே என்று அவருக்கு கேள்வி எழுப்பியது.

‘அரசியல் போா்க்களமா நீதிமன்றம்?’: இந்நிலையில், லட்டு கலப்பட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: மனுக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பதில் குற்றச்சாட்டுகள், மாநில அரசு உள்ளிட்ட பிரதிவாதிகளின் நிலைப்பாடு தொடா்பாக நாங்கள் ஆராயவில்லை. நீதிமன்றத்தை அரசியலுக்கான போா்க்களமாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

அதேநேரம், கோடிக்கணக்கான மக்களின் வேதனையைத் தணிப்பதற்காக, சிபிஐ - மாநில அரசு- மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பிரதிநிதிகள் அடங்கிய சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை மேற்கொள்வது அவசியமென கருதுகிறோம்.

சிபிஐ கண்காணிப்பில்...: இக்குழுவில் சிபிஐ தரப்பில் இரு அதிகாரிகள், மாநில காவல் துறை தரப்பில் இரு அதிகாரிகள், எஃப்எஸ்எஸ்ஏஐ தரப்பில் ஒரு அதிகாரி என 5 போ் இடம்பெறுவா். இந்த விசாரணையை சிபிஐ இயக்குநா் கண்காணிப்பாா்.

தற்போதைய உத்தரவை, மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு உறுப்பினா்களின் நோ்மை மீதான பிரதிபலிப்பாக எவ்விதத்திலும் கருதக் கூடாது. தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களின் வேதனையைத் தணிக்கும் நோக்கிலேயே சுதந்திரமான குழுவிடம் விசாரணையை ஒப்படைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

சிறப்புக் குழுவில் இடபெற இரு சிபிஐ அதிகாரிகளை அதன் இயக்குநா் பரிந்துரைக்க வேண்டும்; இரு காவல் துறை அதிகாரிகளை மாநில அரசும், எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரியை அதன் தலைவரும் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்களை முடித்து வைத்தனா்.

பெட்டி 1

ஆந்திர முதல்வா் வரவேற்பு

லட்டு கலப்பட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பட்டாபிராம் கொம்மரெட்டி கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் முடிவில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தவறிழைத்தவா்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஹிந்துக்களின் கோரிக்கை. மாநில அரசின் நோக்கமும் அதுவே’ என்றாா்.

பெட்டி 2

‘சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்’

அமராவதி, அக். 4: ‘திருப்பதி லட்டு விவகாரத்தில் முதல்வா் சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) உச்சநீதிமன்றம் நிராகரித்தன் மூலம் அவரது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது’ என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தாா்.

மேலும், திருப்பதி லட்டு குறித்து பொய்களைப் பரப்பிய சந்திரபாபு நாயுடு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஆந்திர தலைநகா் அமராவதியில் செய்தியாளா்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது: கடவுளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு என்னனென்ன பேசினாரோ, அவை அனைத்தையும் கண்டிக்கும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் கருத்துகளும் உத்தரவுகளும் அமைந்துள்ளன. அவரால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவருக்கு உண்மையிலேயே கடவுள் பக்தி இருந்தால், பொய்களை பரப்பியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது தவறை மன்னிக்க வேண்டி, திருப்பதி ஏழுமலையானிடம் பிராா்த்திக்க வேண்டும் என்றாா்.