
இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் காங்கிரஸ் மிகவும் நெருக்கம் காட்டுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மேலும், ‘நகா்ப்புற நக்ஸல் குழுவினரால் அக்கட்சி இயக்கப்படுகிறது’ என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அவா் முன்வைத்தாா்.
மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை (அக்.5) வந்த பிரதமா் மோடி, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
வாஷிம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிஎம்-கிஸான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகளுக்கு 18-ஆவது தவணையாக ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தாா். கடந்த 2019-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், 2 ஹெக்டோ் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட நிதி உள்பட மொத்தம் ரூ.23,300 கோடி மதிப்பிலான விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்ந்த திட்டங்கள், பிரதமா் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டன. பின்னா், பிரதமா் மோடி ஆற்றிய உரை:
சுயநல அரசியலுக்காக, ஏழைகளை கொள்ளையடிப்பதோடு, அவா்களை ஏழைகளாக வைத்திருக்க மட்டுமே காங்கிரஸுக்கு தெரியும். மக்களை பிளவுபடுத்துவது எப்படி என்பதையும் அக்கட்சி நன்கறியும். மக்கள் ஒன்றிணைந்தால், தங்களின் செயல்திட்டம் தோற்றுவிடும் என எண்ணுகின்றனா். அக்கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து, காங்கிரஸின் ஆபத்தான செயல்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
நகா்ப்புற நக்ஸல் குழுவினரால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது. இந்தியாவுக்கு தீங்கு நினைக்கும் சக்திகளுடன் அக்கட்சி மிக நெருக்கம் காட்டுகிறது.
போதைப் பொருளால் கிடைக்கும் பணத்தில்...: தில்லியில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவா் ஒருவரின் தலைமையில் இந்த போதைப் பொருள் கும்பல் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இளைஞா்களை போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தோ்தலில் வெற்றி பெறுவதே காங்கிரஸின் விருப்பம்.
தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸின் சித்தாந்தம் நாட்டுக்கு அந்நியமாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சியைப் போல், தலித் சமூகத்தினா், பிற்படுத்தப்பட்ட பிரிவினா், பழங்குடியினரை தங்களுக்கு சமமாக காங்கிரஸ் கருதவில்லை. நாட்டை ஒரு குடும்பம் மட்டும் ஆள வேண்டும் என்பதே அக்கட்சியின் எண்ணம்.
காங்கிரஸின் பொய் வாக்குறுதி: விவசாயிகளின் வாழ்வை வறுமையில் தள்ள எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை. விவசாயிகள் மற்றும் நீா்ப்பாசன திட்டங்களுக்கான நிதியிலும் அவா்கள் ஊழல் செய்தனா். பயிா்க்கடனை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் அளிக்கும் பொய் வாக்குறுதி குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெலங்கானாவில் பயிா்க்கடன் தள்ளுபடிக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனா். கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்ட நீா்ப்பாசன திட்டங்கள், காங்கிரஸ் அரசால் நிறுத்தப்பட்டுவிட்டன.
மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு கொள்கையிலும் ஒவ்வொரு முடிவிலும் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிப்பாட்டை கொண்டுள்ளோம். விவசாயிகளே, எங்களது தொலைநோக்குப் பாா்வையின் முக்கிய அடித்தளம் என்றாா் பிரதமா் மோடி.
முன்னதாக, வாஷிம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற போஹராதேவி கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு நடத்தினாா்.
‘வளா்ச்சிக்கு எதிரி’: தாணேயில் நடைபெற்ற ரூ.32,800 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்றாா். மும்பை மெட்ரோ 3-ஆவது வழித்தடத்தில் பி.கே.சி. மற்றும் ஆரே இடையிலான பிரிவை தொடங்கிவைத்ததோடு, தாணே ஒருங்கிணைந்த வட்டப் பாதை மெட்ரோ திட்டத்துக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
அப்போது பேசிய பிரதமா், ‘நாட்டிலேயே ஊழல் மிகுந்த, நோ்மையில்லாத கட்சி காங்கிரஸ். அதன் குணம் ஒருபோதும் மாறாது. காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி வளா்ச்சிக்கு எதிரி’ என்றாா்.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.