ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

மேடையில் இருந்த பெண்ணை காங்கிரஸார் ஒருவர் தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டு
ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

ஹரியாணாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியாணாவில் செப்டம்பர் மாதத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் ஹூடா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் தீபேந்தர் ஹூடாவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, பின்னிருந்து யாரோ ஒருவர் தொடுவதற்கு முயற்சிப்பதுபோல தெரிகிறது. ஆனால், அருகிலிருந்த வேறொருவர் தொட முற்பட்டவரைத் தடுத்துள்ளார்.

இந்த நிலையில், பாஜகவின் சமூக ஊடகப் பக்கங்களில் இது தொடர்பான விடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பெண்கொடுமைக்கு எதிரான காங்கிரஸின் முழக்கங்கள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள்தான் என்று காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது.

இந்த சம்பவம் குறித்து, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி ``பெண்கள், ஏழைகள், தலித்துகள் உள்பட யாரையும் காங்கிரஸ் கட்சியினர் மதிப்பதில்லை. இது அவர்களின் கலாசாரத்திலும் டி.என்.ஏ.விலும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, யாரேனும் புகார் அளித்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்; தவறிழைத்த யாரையும் காப்பாற்றாது. பெண்கள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கம்’’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா ``நான் அந்த பெண்ணிடம் பேசினேன். ஒருவர் அவரைத் தொட்டு, மேடையில் இருந்து அகற்ற முயற்சித்ததாகக் கூறினார். விடியோவிலும் அதையே பார்த்தோம். யாரோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறினார். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தால், அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா கண்டித்ததுடன், ``தீபேந்தர் ஹூடா முன்னிலையிலேயே மேடையில் காங்கிரஸ் தலைவர்களால் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தி அறிக்கைகள் மற்றும் குமாரி செல்ஜாவும் உறுதிப்படுத்தியுள்ளார். பகல் நேரத்திலேயே பொது இடங்களில், காங்கிரஸ் கூட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com