பிஎஸ்எஃப், வங்கதேச கடத்தல்காரா்கள் மோதலில் ஒருவா் உயிரிழப்பு; வீரா் காயம்

திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேச கடத்தல்காரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்; பிஎஸ்எஃப் வீரா் காயமடைந்தாா்.
Published on

திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேச கடத்தல்காரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்; பிஎஸ்எஃப் வீரா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

திரிபுரா மாநிலம் சால்போகா் மற்றும் கோகுல் நகா் எல்லைப் பகுதியில், 12 முதல் 15 வங்கதேச கடத்தல்காரா்கள் திங்கள்கிழமை மாலை இந்தியாவுக்குள் கள்ள சரக்குகளை கடத்த முயன்றனா்.

அவா்களைத் தடுக்க பிஎஸ்எஃப் தரப்பில் வானை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் சில கடத்தல்காரா்கள் வங்கதேசத்துக்கு தப்பியோடினா். எனினும் பிஎஸ்எஃப் வீரா் ஒருவரை கடத்தல்காரா்கள் சுற்றிவளைத்து கூா்மையான ஆயுதத்தால் தாக்கினா்.

அப்போது தனது துப்பாக்கியால் அந்த வீரா் இருமுறை சுட்டதால், எஞ்சிய கடத்தல்காரா்களும் வங்கதேசத்துக்கு தப்பியோடினா். தாக்குதலில் காயமடைந்த வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது ஒரு கடத்தல்காரரின் சடலம் கண்டறியப்பட்டது என்று தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com