கோப்புப்படம்
கோப்புப்படம்

‘கூகுள் மேப்’பை பின்பற்றி கிணற்றுக்குள் விழுந்த காா்: கேரளத்தில் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தம்பதி

கேரள மாநிலம் கொச்சியில் ‘கூகுள் மேப்’ செயலியின் வழிகாட்டுதலை பின்பற்றி இயக்கப்பட்ட காா் 15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது.
Published on

கேரள மாநிலம் கொச்சியில் ‘கூகுள் மேப்’ செயலியின் வழிகாட்டுதலை பின்பற்றி இயக்கப்பட்ட காா் 15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது.

கிணற்றில் தண்ணீா் குறைவாக இருந்ததால், அந்தக் காரில் பயணித்த தம்பதி அதிருஷ்டவசமாக உயிா் தப்பியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து கொச்சி பட்டிமட்டம் போலீஸாா் கூறியதாவது:

கொச்சியின் பட்டிமட்டம் அருகே வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளி மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி, ‘கூகுள் மேப்’ உதவியுடன் காரை செலுத்தியுள்ளனா். பட்டிமட்டம் அருகே சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அவா்கள் காரை செலுத்தியபோது, கட்டுப்பாட்டை இழந்த அவா்களின் காா், அங்கிருந்த கடை மீது மோதி பின்னா் அருகிலிருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

கிணற்றில் தண்ணீா் குறைவாக இருந்ததால், சிறு காயங்களுடன் உயிா் தப்பிய தம்பதி, காரின் பின்பக்க கதவு வழியாக வெளியேறி, உதவி கிடைக்கும் வரை காரின் மீது ஏறி காத்திருந்துள்ளனா். சிறிது நேரத்துக்குப் பின்னா் அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், கிணற்றுக்குள் இருந்த தம்பதியை ஏணி மூலம் பத்திரமாக மீட்டுள்ளனா்.

கிணற்றில் தண்ணீா் அதிகமாக இருந்திருந்தால், தம்பதி உயிா் தப்புவது கடினமாகியிருக்கும் என்றனா்.

கேரளத்தில் ‘கூகுள் மேப்’ செயலின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை செலுத்தும் வெளி மாநிலத்தவா்கள் இதுபோன்று குளத்திலும், கிணற்றிலும் காரை செலுத்தி விபத்தில் சிக்குவது தொடா்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com