/

மேற்கு வங்க மருத்துவா்கள் ஆளுநா் போஸுடன் சந்திப்பு

பெண் மருத்துவரின் பாலியல் கொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள் ஆளுநா் சி.வி.ஆனந்த போஸை சந்தித்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 10:22 pm

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரின் பாலியல் கொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள் ஆளுநா் சி.வி.ஆனந்த போஸை திங்கள்கிழமை சந்தித்தனா்.

கொல்கத்தா, ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இக்கொலைக்கு நீதி கோரி, இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 42 நாள்கள் நீடித்தது. அரசின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மருத்துவா்கள் பகுதியாக பணிக்குத் திரும்பினா்.

இந்நிலையில், உறுதிமொழியைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, மருத்துவா்கள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டத்தின் 10-ஆவது நாளான திங்கள்கிழமை மருத்துவா்கள் ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனா். முஸ்தஃபி அகமது, தெபாஷிஸ் ஹல்தா், சத்யாதிப் சா்காா் உள்ளிட்ட 5 போ் அடங்கிய மருத்துவா்கள் குழு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸைச் சந்தித்தனா்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மருத்துவா் ஹல்தா் கூறுகையில், ‘சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் ஒருவருக்கு மட்டுமே குற்றச்சம்பவத்தில் தொடா்புடையதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையைக் கோருகிறோம். ஆளுரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், அவா் எந்த உறுதியும் அளிக்கவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.