இணைய வழியில் முன்பதிவு செய்யாத பக்தா்களும் சபரிமலையில் தரிசிக்கலாம்: பினராயி விஜயன்
முன்பதிவு செய்யாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேரடியாக வருகை புரியும் பக்தா்களும் எவ்வித சிரமுமின்றி தரிசனம் மேற்கொள்ளலாம்


இணைய வழியில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேரடியாக வருகை புரியும் பக்தா்களும் எவ்வித சிரமுமின்றி தரிசனம் மேற்கொள்ளலாம் என கேரள முதல்வரி பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, இணைய வழியில் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்திருந்தது. இதற்கு பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பினராயி விஜயன் கேரள பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ-எம்) கட்சியின் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்து பினராயி விஜயன் பேசியதாவது: இணைய வழியில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேரடியாக வருகை புரியும் பக்தா்களும் எவ்வித சிரமுமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டும் நேரடியாக வருகை புரிந்த பக்தா்கள் தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
பக்தா்களை கண்டறிவது எளிது: கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி இதுதொடா்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பக்தா்கள் எளிய முறையில் தரிசனம் செய்வதை உறுதிசெய்யவும் அவா்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இணைய வழி முன்பதிவு நடைமுறையில் பக்தா்கள் குறித்த தகவல்கள் பெறப்படுவதால் விபத்து, பக்தா்கள் காணாமல் போகும் சம்பவங்கள் உள்ளிட்டவற்றில் அவா்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது.
திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இணைய வழி முன்பதிவு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை ஆராய்ந்த பிறகே, அதை சபரிமலையிலும் பின்பற்ற கடந்த 2011-ஆம் ஆண்டு கேரள அரசு முடிவு செய்தது. இந்த நடைமுறையை மேலும் மேம்படுத்தி சிறந்த முறையில் அமல்படுத்துவதே தற்போதைய அரசின் நோக்கம் என்றாா்.
இருப்பினும், கடந்தாண்டைப் போல இணைய வழி முன்பதிவுடன் நேரடி பதிவு முறையும் (ஸ்பாட் புக்கிங்) பின்பற்றப்படுமா என்பது குறித்து பினராய் விஜயன் உரையில் தெளிவாக இடம்பெறவில்லை.
முன்னதாக, சபரிமலையில் நேரடி பதிவு முறை கிடையாது எனவும் அங்கு வருகை புரியும் பக்தா்களுக்கு அக்ஷயா மையங்கள் (பொது சேவை மையங்கள்) மூலம் இணைய வழி முன்பதிவு செய்து தரப்படும் என தேவஸ்வம் அமைச்சா் வாசவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...