மீண்டும் வன்முறை! மணிப்பூரில் என்ன நடக்கிறது?
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம்...


மணிப்பூரில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மெய்தி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் குக்கி பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனர். இந்த இரு சமூகங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி - மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பின்னர் அங்கு நிலைமை ஓரளவு சீராகி வந்த நிலையில், செப். 1 ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர்.
பின்னர் செப். 7 ஆம் தேதி ஜிரிபம் பகுதியில் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதுமே மணிப்பூரில் பதற்ற சூழ்நிலை இருந்துவந்தது. இணையசேவை தடை, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.,
அக்டோபர் மாத தொடக்கத்தில் பதற்றம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலையில் இருந்து இம்பாலின் மேற்கில் உள்ள கோட்ருக் கிராமத்தை நோக்கி போராட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர் பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே நள்ளிரவு 2 மணி வரை துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 11 மணியளவில்தான் தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) அதிகாரிகள், கோட்ருக் கிராமத்தில் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இன்று(சனிக்கிழமை) போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 5 மணியளவில் போரோபெக்ரா காவல் நிலையம் அருகே உள்ள கிராமத்தை குறிவைத்து அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் குண்டுகளையும் வீசியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. உயிரிழப்பு குறித்து தகவல் எதுவும் இல்லை.
இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தில்லியில் ஆலோசனை
வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள பதற்ற சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தைக்கு குக்கி மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய உளவுத் துறை அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உளவுத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், மெய்தி, குக்கி மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினரான குக்கி சமூகத்தினர் சார்பில், தங்களுக்கு யூனியன் பிரதேசம் போன்ற தனி நிர்வாகம் வேண்டும் என்று அந்த சமூக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இதனை நிறைவேற்றும்வரை சமாதானம் பேச முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை நடந்த மறுநாளே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்து பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...