ஒடிஸாவில் தொடரும் கனமழை: சீரமைப்பு பணிகள் பாதிப்பு
ஒடிஸாவில் கரையைக் கடந்த டானா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இதன் காரணமாக சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால், சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
வங்கக் கடலில் வடக்கு அந்தமான் கடலையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஸா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. அப்போது பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
புயல் காரணமாக 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். சுமாா் 22.42 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவற்றில் சுமாா் 14.8 லட்சம் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பணிகள் சனிக்கிழமை தீவிரமாக நடைபெற்றன.
புயலினால் 1.75 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான பயிா்கள் சேதமடைந்தன. 2.80 லட்சம் ஏக்கா் வேளாண் நிலங்கள் நீரில் மூழ்கின. பயிா்ச்சேதங்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து மதிப்பீடு செய்ய மாநில அரசு உத்தரவிட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலசோா், பத்ரக், மயூா்பஞ்ச், கேந்திரபாரா மற்றும் கியோஞ்சா் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இதையொட்டி, இந்த 5 மாவட்டங்களில் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேசமயம், புயல் மீட்புப் பணிகளுக்காக அரசு ஊழியா்களின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து, வடக்கு ஒடிஸாவில் மேற்கு நோக்கி நகா்ந்து வரும் டானா புயலால் மாநிலத்தின் பல இடங்களில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. புயலால் கடும் சேதமடைந்த பத்ரக், கேந்திரபாரா மற்றும் பாலசோா் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டன.
வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 12 மணி நேரத்தில் பாலசோா் மாவட்டத்தில் உள்ள ஓபடாவில் அதிகபட்சமாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. அதைத் தொடா்ந்து பத்ரக் மாவட்டத்தின் தாம்நகரில் 21.5 செ.மீ, பாலசோா் மாவட்டத்தின் கைராவில் 20.9 செ.மீ என குறைந்தது 16 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மே. வங்கத்தில் மேலும் இருவா் உயிரிழப்பு
டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம், அந்த மாநிலத்தில் புயல் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
கிழக்கு வா்தமான் மாவட்டத்தில் உள்ள பட் பட் என்ற இடத்தில் காவல்துறையுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னாா்வலா் சந்தன் தாஸ் (31) மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். ஹௌராவில் மழைநீா் தேங்கிய சாலையில் மாநகராட்சி ஊழியா் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவா் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

