
பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்காக சி-295 ரக விமானங்களை தயாரிக்கவுள்ள டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்து உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
“எனது நண்பரும் ஸ்பெயின் பிரதமருமான பெட்ரோ சான்செஸ், முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இந்தியா, ஸ்பெயின் இடையேயான உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையானது, இந்தியா-ஸ்பெயின் இடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், 'இந்தியாவில் தயாரிப்பு’ ‘உலகத்துக்கான தயாரிப்பு’ ஆகிய திட்டங்களை வலுப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நாட்டின் மிகச் சிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்தோம். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும். நான் குஜராத் முதல்வராக இருக்கும்போது தொடங்கப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலை மூலம், இன்று வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுபோன்று, இந்த ஆலையில் இருந்து வரும்காலங்களில் வெளிநாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது.
இன்று, நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி அமைப்பில், இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. 10 ஆண்டுகளுக்கு முன், நாம் உறுதியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த உச்சத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை. நாம் எடுத்த முடிவுகளுக்கான பலன் நம் கண்முன் உள்ளது. பொதுப் பணித்துறையை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்தோம். உ.பி. மற்றும் தமிழகத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான போக்குவரத்து துறையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம். வருங்காலத்தில் இந்தியாவிலேயே பயணிகள் விமானங்களும் தயாரிக்கப்படும்.
தற்போது, இந்திய விமான நிறுவனங்கள் 1,200 விமானங்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. விரைவில் இந்த ஆலை, இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் முக்கியப் பங்காற்ற போகிறது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.