
புது தில்லி: கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஓளிரவிடப்பட்டன.
‘சேஞ்ச்இங்க்’ அறக்கட்டளை சாா்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் இணை நிறுவனா் நுபுா் ஜுன்ஜுன்வாலா கூறியதாவது:
நாட்டின் மக்கள்தொகையில் 3.5 கோடி மாணவா்கள் உள்பட 20 சதவீதம் பேருக்கு கற்றல் குறைபாடு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லியில் அமைந்துள்ள மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள நாா்த் பிளாக், செளத் பிளாக் கட்டடங்கள், குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் உள்பட தில்லியில் உள்ள பிற நினைவுச்சின்னங்களும் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சிவப்பு விளக்கால் ஒளிரவிடப்பட்டன.
கற்றல் குறைபாடு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
தில்லி மட்டுமின்றி பிகாா் தலைநகா் பாட்னா, ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சி, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூா், நாகாலாந்து தலைநகா் கொஹிமா, ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லா, மகாராஷ்டிர தலைநகா் மும்பை இதேபோன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்ட கற்றல் குறைபாடு பாதிப்புகள் குறித்து மக்களிடையே விரைவான விழிப்புணா்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கான தடைகளை நீக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்றாா்.
பொதுவாக கற்றல் குறைபாடு பாதிப்பு உடையவா்கள், புரிந்துகொள்வதற்கும், பேசுவதற்கும், படிக்கவும், எழுதவும், கணித கணக்கீடுகளை செய்வதற்கும் சிரமப்படுவா். ஆனால், புதிய கண்டுபிடிப்புகள், உயா்நிலை சிந்தனைகளில் அவா்களின் திறன் மேம்பட்டு காணப்படும். உலகில் சுயமாக முன்னேறி லட்சாதிபதியானவா்களில் 40 சதவீத பேரும், ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் போன்ற பல பிரபல அறிவியல் கண்டுபிடிப்பாளா்களும் கற்றல் குறைபாடு பாதிப்புடையவா்கள்.
மூளை வளா்ச்சிக் குறைபாடு உள்பட குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் அனைத்தும் மாற்றுத்திறனாள்கல் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தக் குறைபாடு உடையவா்களக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற வாழ்வாதார உரிமைகளிலும் சம வாய்ப்பு அளிக்கப்படுவது கட்டாயமாகும் என்று ‘சேஞ்ச்இங்க்’ அறக்கட்டளை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.