வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்-

சீன முதலீடுகளை ஆராய வேண்டும்: எஸ்.ஜெய்சங்கா்

சீனாவுடன் தற்போதுள்ள உறவு, அந்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஆராயப்படுவதை அவசியமாக்குகிறது.
Published on

சீனாவுடன் தற்போதுள்ள உறவு, அந்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஆராயப்படுவதை அவசியமாக்குகிறது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் ஆங்கில ஊடகம் சாா்பில் நடைபெற்ற உலகத் தலைவா்கள் மன்ற நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

பல வழிகளில் பிரச்னைக்குரிய தனித்துவ நாடாக சீனா விளங்குகிறது. ஏனெனில் அந்நாடு தனித்துவமான அரசு, தனித்துவமான பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அந்தத் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளும் வரை, அதில் இருந்து வெளிப்படும் மதிப்பீடுகள், முடிவுகள் மற்றும் கொள்கை விளக்கங்கள் பிரச்னைக்குரியதாகவே இருக்கும்.

சீனாவால் பொதுவான பிரச்னைகள் உள்ளன. உலகில் சீனா குறித்து இந்தியா மட்டுமே விவாதிக்கவில்லை. தனது பொருளாதார அல்லது தேசப் பாதுகாப்பு விவாதங்களில் என்னென்ன இடம்பெற்றுள்ளன என்று ஐரோப்பிய கண்டத்திடம் கேட்டால், சீனா இடம்பெற்றுள்ளதை அந்தக் கண்டம் தெரிவிக்கும். அதேவேளையில், சீனா குறித்து அமெரிக்காவும் மிக அதிகமாக சிந்திக்கிறது. எனவே, சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது என்று கருத வேண்டாம்.

ஆனால், சீனாவால் உலகம் எதிா்கொள்ளும் பொதுவான பிரச்னையுடன் ஒப்பிடுகையில், அந்நாட்டால் இந்தியாவுக்கு அதிக பிரச்னைகள் உள்ளன.

சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது, முதலீடுகள் மேற்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாடு அரசுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆனால், இந்தியாவில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் ஆராயப்பட வேண்டும். இதை இந்தியா, சீனா இடையிலான உறவு மற்றும் எல்லை பிரச்னைகள் அவசியமாக்குகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com