நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள்ளான அதிகப்படியான வழக்குகள் நீதித் துறைக்கு மிகப்பெரிய சவால் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
மேலும், நீதித் துறையில் உள்ள ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்றும், உடனடித் தீர்ப்பு அளிப்பதை, குறிப்பாக பாலியல் வழக்குகளில் உடனடியாக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டையொட்டி நீதித் துறை பணிகள் தொடர்பான 2 நாள்கள் தேசிய மாநாடு தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதி மற்றும் பாராட்டு நிகழ்ச்சியில் இன்று (செப். 1) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் முர்மு பேசியதாவது,
''பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் நீதித் துறை அளிக்கும் தீர்ப்பானது தலைமுறையைக் கடந்தே வருகிறது. இதனால் கூர்ந்து அறியும் திறன் நீதிமன்றத்துக்கு இல்லை என்ற உணர்வு மக்களிடையே எழுந்துள்ளது.
எளிய மக்கள் பலர் நீதித் துறையானது கடவுள் போன்று கருதுகின்றனர். அவர்களுக்கு அங்கு நீதி கிடைக்கும். நீதி கிடைக்க தாமதமாகலாம். ஆனால் அங்கு அநீதிக்கு இடமிருக்காது. ஆனால் அந்தத் தாமதம் எவ்வளவு தூரம்? எத்தனை காலத்துக்கு? இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்'' எனப் பேசினார்.
தாமதமாகும் கலாசாரம் மாற வேண்டும்
பாலியல் வழக்குகளில் வழங்கப்படும் நீதி குறித்து பேசிய அவர், ''தாமதமாக சிலருக்கு நீதி கிடைக்கும். ஆனால் அதன்மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாலம் கூட போகலாம். சிலரின் வாழ்க்கையும் முடிந்திருக்கலாம். இதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சி வாழ வேண்டியுள்ளது. இதில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது. ஒரு சமூகமாக நாம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணையாக நிற்பதில்லை.
நீதித் துறையில் உடனடித் தீர்வை வழங்கும் வகையில், ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்'' என திரெளபதி முர்மு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.