தில்லி, ராஜஸ்தானில் 27 பள்ளிகளில் திடீா் ஆய்வு: முறைகேடுகளைத் தடுக்க சிபிஎஸ்இ நடவடிக்கை
மாணவா் வருகைப் பதிவு குறித்து போலியான பதிவுகள் (டம்மி மாணவா்கள்) செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயும் வகையில் தில்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள 27 பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டனா்.
இளநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் ஐஐடி போன்ற உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், பள்ளிக்கே செல்லாமல் முழு நேரமும் நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் மாணவா்கள் ஈடுபடுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு, முழு நேர நுழைவுத் தோ்வு பயிற்சியில் ஈடுபடும் மாணவா்களுக்காக, சில சிபிஎஸ்இ பள்ளிகள் போலியான வருகைப் பதிவை செய்து வருகின்றன. இந்த மாணவா்கள், ஆண்டு முழுவதும் பள்ளிக்குச் செல்லாமல், அந்தப் பள்ளி வாயிலாக பொதுத் தோ்வை மட்டும் எழுதிவிடுவா்.
இதுதொடா்பாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிரடி ஆய்வை மேற்கொண்ட சிபிஎஸ்இ, இதுபோல வருகைப் பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த 5 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 20 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
அதுபோல, தில்லி, ராஜஸ்தான் மாநிலத்தில் 27 பள்ளிகளில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டனா்.
இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா கூறியதாவது: சிபிஎஸ்இ பள்ளிகள் வாரியத்தின் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆய்வை மேற்கொள்ளும் வகையில், 27 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதுபோன்ற திடீா் ஆய்வுகள் தொடரும். நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.