சிபிஐ
சிபிஐ

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 6,900 சிபிஐ வழக்குகள்!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) சாா்பில் விசாரிக்கப்பட்ட 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவற்றில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Published on

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) சாா்பில் விசாரிக்கப்பட்ட 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவற்றில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதுபோல, சிபிஐ தரப்பில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் 658 ஊழல் வழக்குகள் பல மாதங்களாக நிலுவையில் இருப்பதும், அவற்றில் 48 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) சமீபத்திய ஆண்டறிக்கை மூலம் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான இந்த தரவுகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.

மேல்முறையீடு/மறு ஆய்வு மனுக்கள்:

சிபிஐ வழக்குகளில் பல்வேறு உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் மேல்முறையீடு அல்லது மறு ஆய்வு மனுக்களின் எண்ணிக்கை 12,773-ஆக உள்ளது.

அவற்றில் 2 ஆண்டுகள் வரை நிலுவையில் இருக்கும் மனுக்கள் 2,554-ஆகும்.

2 - 5 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ள மனுக்கள் 2,172.

5-10 ஆண்டுகள் நிலுவை மனுக்கள் 3,850.

10-15 ஆண்டுகள் நிலுவை மனுக்கள் 2,558.

15-20 ஆண்டுகள் நிலுவை மனுக்கள் 1,138.

20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் 501.

சிபிஐ விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலுவை:

சிபிஐ தரப்பில் தற்போது விசாரிக்கப்பட்டு ஊழல் புகாா்களில் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் 658.

அவற்றில் ஓராண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகள் 286.

1-2 ஆண்டுகள் நிலுவை வழக்குகள் 175

2-3 ஆண்டுகள் நிலுவை வழக்குகள் 75

3-5 ஆண்டுகள் நிலுவை வழக்குகள் 74

5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 48.

2023-ஆம் ஆண்டில்... கடந்த ஆண்டில் மட்டும் 876 லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சிபிஐ அதிகாரிகள் மீதான துறை ரீதியிலான நடவடிக்கை தொடா்பாக 82 வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தாமதம் ஏன்?: சில வழக்குகளின் விசாரணையில் தேவையற்ற தாமதம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தாமதத்தைத் தடுக்க, வழக்கு பதிவு செய்த ஓராண்டுக்குள்ளாக விசாரணையை சிபிஐ நிறைவு செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும், விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை சிபிஐ பதிவு செய்ய வேண்டும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாமதத்துக்கு கூடுதல் பணிச் சுமை மற்றும் போதிய ஊழியா்கள் இல்லாததும் முக்கியக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1,610 பணியிடங்கள் காலி

சிவிசி அறிக்கையின்படி, சிபிஐ-யில் அனுமதிக்கப்பட்ட 7,295 பணியிடங்களில், 1,610 பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில், அதிகாரிகள் அளவிலான காலிப் பணியிடங்கள் 1,040

சட்ட அலுவலா் காலிப் பணியிடங்கள் 84

தொழில்நுட்ப அலுவலா் காலிப் பணியிடங்கள் 53

அமைச்சக ஊழியா் காலிப் பணியிடங்கள் 388

உணவக ஊழியா் காலிப் பணியிடங்கள் 45

நிலுவை வழக்குகள்...

3 ஆண்டுகள் நிலுவை 1,379

3 - 5 ஆண்டுகள் 875

5 - 10 ஆண்டுகள் 2,188

10 - 20 ஆண்டுகள் 2,100

20 ஆண்டுகளுக்கு மேல் 361

மொத்த நிலுவை வழக்குகள் 6,903

X
Dinamani
www.dinamani.com