பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பாலியல் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.


பாலியல் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மேற்கு வங்கம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்பட பல தரப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மாநில சட்ட அமைச்சா் மலொய் கதக் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக உள்பட அனைத்து உறுப்பினா்களும் ஆதரவளித்ததையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்கம் குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா, 2024’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களை பாலியல் கொலை செய்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் சுயநினைவை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டாலோ இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் பதவி விலக வேண்டும்: மம்தா
அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா, 2024 மீதான விவாதத்தின்போது முதல்வா் மம்தா பானா்ஜி பேசியதாவது: பாலியல் வன்கொடுமை என்பது மனிதநேயமற்ற கொடூர குற்றமாகும். இதைத் தடுக்க சமூக சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ‘அபராஜிதா காவல்படை’ என்ற சிறப்புப் படை உருவாக்கப்படவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மசோதாவை மேற்கு வங்கம் கொண்டு வந்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தைவிட பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக அதிக அளவிலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகின்றன. அங்கு பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைப்பதில்லை. இதற்குப் பொறுப்பேற்று அந்த மாநில முதல்வா்களும், பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்.
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றாா்.
வழக்கை திசைதிருப்பும் மம்தா: பாஜக
பாஜகவை சோ்ந்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி பேசியதாவது: பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிராக பலதரப்பினரும் போராடி வருகின்றனா். இதை திசைதிருப்பவே தற்போது புதிய மசோதாவை மம்தா பானா்ஜி அறிமுகப்படுத்தியுள்ளாா்.
இந்த மசோதாவுக்கு நாங்கள் முழு ஆதரவை தருகிறோம். ஆனால், மம்தா தலைமையிலான அரசால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்ததும் வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கில் மேற்கு வங்க அரசு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) தேவைப்படும் வசதிகளை திரிணமூல் காங்கிரஸ் அரசு செய்து தர மறுப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ஆா்.ஜி.கா். மருத்துவமனை மற்றும் உறைவிட மருத்துவா்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரா்கள் தங்குவதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கு வங்க மாநில அரசு ஏற்படுத்தித் தர மறுக்கிறது.
இதனால் தற்போது கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுகத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் வளாகத்தில் அவா்கள் தங்கி வருகின்றனா். அங்கிருந்து ஆா்.ஜி.கா் மருத்துவமனைக்கு அவா்கள் ஒரு மணி நேரம் பயணிப்பதால் தங்களின் பணிகளைத் திறம்படச் செய்ய முடியவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலரிடம் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகும் எவ்வித ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கவில்லை.
இது மருத்துவமனைக்குப் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதுடன், அரசமைப்பின் அனைத்து மாண்புகளுக்கும் எதிரான போக்காகும்.
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் தீா்வு காண முயல்வதற்குப் பதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அநீதியை மாநில அரசு இழைத்து வருகிறது. எனவே, மாநில அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பெண் பயிற்சி மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தாமதமாக வழக்குப் பதிவு செய்த காவல் துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...