ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக, முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 1 கோடி வழங்குவதாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன்காரணமாக இரு மாநிலங்களிலும் பல இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், இரு மாநிலங்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆந்திரம் மற்றும் தெலங்கானா முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 1 கோடி வழங்குவதாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 4 கோடி வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பவன் கல்யாண் தெரிவித்ததாவது ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்க, மாநில அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் 200 கிராம பஞ்சாயத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 260 சிறப்பு துப்புரவு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
20,000-க்கும் மேற்பட்ட குப்பைக் குவியல்களை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 9 வரையில் 100 நாள் சுகாதார இயக்கம், குப்பை இல்லாத கிராமங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நீர் ஆதாரங்களில் ஏதேனும் மாசுபாடு ஏற்பட்டால், அதனைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மொத்தம் 9,932 தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், கசியும் குழாய்களிலும் உடனடி பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் முதலில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க வேண்டும்; அதன் பின்னரே, அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.