அஸ்ஸாமில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக மோசடி நடத்திய 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
அஸ்ஸாமில் ஆன்லைன் பயன்பாடுகள் மூலமாகவும், கைமுறையாகவும் நடக்கும் வர்த்தகத்தின் மூலம், 60 நாள்களுக்குள் 30 சதவிகித வருமானத்தை தருவதாக வாக்குறுதி அளித்து, சிலர் மக்களை இந்த மோசடியில் சிக்க வைத்தனர்.
இந்த நிலையில், மோசடிக்கு ஆளாக்கப்பட்டவர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து 38 பேரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் சுமார் ரூ. 2,200 கோடி ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ``மோசடி செய்பவர்களின் வலையில் சிக்காமல், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் விசாரணை நடந்து வருகிறது. 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையில், வட்டி வழங்குவதற்கான மந்திரம் யாரிடமும் இல்லை.
நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை, யாராவது பறித்துக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய மோசடி செய்பவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அவையனைத்தும், முதலீட்டாளர்களின் பணமே’’ என்று கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் பிஷால் புகான், ஸ்வப்னனில் இருவரிடமும் சொகுசு கார்கள், பங்களா வைத்திருந்ததுடன், தங்களை தொழிலதிபர்களாகவும் காட்டிக் கொண்டுள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்து பங்கு பெற்றதாகக் கூறப்படும் நடிகையும் நடன இயக்குநருமான சுமி போராவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.