
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை சமாஜவாதி கட்சி தோற்கடிக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறிய கருத்தை விமர்சித்துள்ளார், முதல்வர் யோகி ஆதித்யநாத்.
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செப். 3, செவ்வாய்க்கிழமையில், ``உத்தரப் பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டில் பாஜகவை சமாஜவாதி கட்சி துடைத்தெறிந்து விடும். மேலும், அந்த முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய அளவிலான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து புல்டோசர்களும் கோரக்பூர் நோக்கி திரும்பும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமையில் லக்னௌவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், ``அனைவரின் கைகளும் புல்டோசரில் பொருந்தாது. அதற்கு, மூளையும் தைரியமும் தேவை’’ என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் "புல்டோசரை ஓட்டுவதற்கு ஸ்டீயரிங், சக்கரத்தின் மீது கட்டுப்பாடு மட்டுமே தேவை; மூளை அல்ல.
உத்தரப் பிரதேசத்திலும் தில்லியிலும் உள்ள உயர் அதிகாரிகள் எப்போது ஸ்டீயரிங் சக்கரத்தை மாற்றுவார்கள் என்று உங்களுக்கு தெரியாது.
உத்தரப் பிரதேச அரசு புல்டோசர்களை தவறாகப் பயன்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தின் புல்டோசர் குறித்து நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை நடந்த புல்டோசர் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா இல்லையா?
நீங்களும் உங்கள் புல்டோசரும் சேர்ந்து, ஒரு தனி கட்சியை உருவாக்கி, புல்டோசர் சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடுங்கள். உங்கள் பெருமை சிதைவது அதில் தெரிந்து விடும்.
எப்படியிருந்தாலும், உங்கள் தற்போதைய சூழ்நிலையில், நீங்கள் பாஜகவில் இருந்தாலும், இல்லாதவரைப் போன்றவரே’’ என்று பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.