முடா முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை அடுத்த முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சித்தராமையாவுக்கு அடுத்த இடத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் இருப்பினும், தாழ்த்தப்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அடுத்த முதல்வர் ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கட்சியின் மேலிடம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
யார் அடுத்த முதல்வர்?
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக கட்சியின் ஒரு பகுதியினர் குரல் எழுப்புவதாகவும், பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள சதீஷ் ஜார்கிஹோலிக்கு மற்றொரு பிரிவினர் ஆதரவளிப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த முதல்வருக்கான போட்டியில் சதீஷ் இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அவர், கட்சியின் மேலிட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சதீஷுடன் ஆட்சி மாற்றம் மற்றும் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
எஸ்.டி., சமூகத்தினரிடையே பிரபலமான தலைவராகவுள்ள சதீஷுக்கு, எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
சித்தராமையாவை மாற்றுவதற்கு கட்சியின் மேலிடம் முடிவெடுத்தால், அவரின் ஆதரவும் சதீஷுக்கே உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் மற்றொரு தலித் தலைவரான உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், அவருக்கு கார்கே, சதீஷ் உள்ளிட்டோர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிகிறது.
சதீஷ் ஜார்கிஹோலி யார்?
62 வயதாகும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் ஜார்கிஹோலி, கர்நாடக அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் யெமகன்மார்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக, எச்.டி. குமாரசாமி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராகவும், சித்தராமையாவின் அமைச்சரவையில் சிறு, குறு தொழில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இவரது சகோதரர்கள் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் பாலசந்திரா ஜார்கிஹோலி ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். இவரது மகள் பிரியங்கா ஜார்கிஹோலி, மக்களவை உறுப்பினராக உள்ளார்.
விடுவாரா சிவக்குமார்?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸின் முதல்வராக சிவக்குமார் தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.
டி.கே.சிவக்குமாரும் கட்சியின் நலனுக்காக மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, சித்தராமையாவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது, சிவக்குமாரை விட்டுவிட்டு வேறொரு தலைவரை முதல்வராக்கினால், அவர் அவ்வளவு எளிதாக விட்டுவிடுவாரா? என்பதே கட்சியினரிடையே பேசுபொருள்.
இருப்பினும், அடுத்த முதல்வர் தேர்வு செய்வதில், காங்கிரஸ் மேலிடத்தில் குழப்பம் நீடிப்பதால் இறுதி முடிவுக்காக காத்திருக்கதான் வேண்டும்.