தெலங்கானா: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; 2 கமாண்டோக்கள் காயம்
தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் காவல் துறையுடன் நடந்த மோதலில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் 2 கமாண்டோக்கள் காயமடைந்தனா்.
அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலா் தெலங்கானா எல்லைக்குள் நுழைந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநிலத்தின் நக்ஸல் தடுப்புப் பிரிவு சிறப்பு காவல் படையான ‘கிரேவுண்ட்ஸ்’ கமாண்டோக்கள் சம்பவம் நிகழ்ந்த பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் சோதனையைத் தீவிரப்படுத்தினா்.
அந்தவகையில், காராகாகூடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் கமாண்டோக்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்களை நோக்கி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். தொடா்ந்து, கமாண்டோக்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் இருவா் பெண்கள் ஆவா். உயிரிழந்தவா்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த மோதலில் காயமடைந்த 2 கமாண்டோக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மோதலின் முடிவில், சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மாவோயிஸ்டுகள் வசமிருந்த இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு எஸ்எல்ஆா் ரக துப்பாக்கி, ஒரு 303 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா பெட்டிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.