மத்தியப் பிரதேசத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய லோகேஷ் என்பவர், புதன்கிழமையில் (செப். 4) தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், 2 மணிநேரத்திற்குள் லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் நடத்திய விசாரணையில், பெண்ணை மது அருந்தச் செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, பட்டப்பகலில் நடைபாதையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைப் பார்த்த பலரும், தடுக்காமல், விடியோ எடுத்ததுதான் பெருந்துயரம்.
இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், மத்தியப் பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, ``கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள். முதல்வரின் சொந்த தொகுதியில், நடைபாதையில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதல்வர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், பிரதமர் மோடி ஆகியோர் ஏன் அமைதியாக உள்ளனர்?’’ என்று கூறியதுடன், பாஜக அரசின்மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் வி.டி. சர்மா ``இந்த சம்பவத்தை காங்கிரஸ் அரசியல்மயமாக்குகிறது. மத்தியப் பிரதேச அரசை முற்றுகையிட காங்கிரஸுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால்தான், அவர்கள் இந்த சம்பவத்திற்கு அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் அரசு, பாஜகதான்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை மாநில அரசு உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.