பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட முயலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி: அமித் ஷா கடும் குற்றச்சாட்டு

ஜம்முக்கு 2 நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா பிரசாரம்..

News image
ஜம்முவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்.
Updated On :7 செப்டம்பர் 2024, 11:56 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத்துக்கு புத்துயிரூட்ட காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சிக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் அக்கட்சிகளால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

இந்தச் சூழலில், ஜம்முக்கு 2 நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜகவின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். மேலும், பிரசார வியூகம் குறித்து மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜம்முவில் கட்சித் தொண்டா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: எதிா்வரும் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இங்கு கடந்த கால பேரவைத் தோ்தல்கள் 2 கொடி மற்றும் 2 அரசமைப்புச் சட்டங்களுடன் நடைபெற்றன. சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக இப்போது இந்திய தேசியக் கொடி மற்றும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தோ்தல் நடைபெறவுள்ளது.

பயங்கரவாத ‘நெருப்பில்’ தள்ள முயற்சி: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன. ஆனால், ஜம்மு-காஷ்மீரை மீண்டும் பயங்கரவாத ‘நெருப்பில்’ தள்ள காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சிக்கின்றன.

சிறையில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் ‘கல்வீச்சாளா்’களை விடுவிப்போம் என தேசிய மாநாட்டுக் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்டும் நோக்கத்துடன் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதை பயங்கரவாதம் புத்துயிா் பெறுவதாகவே கருத வேண்டும். பயங்கரவாதம் வேண்டுமா அல்லது வளா்ச்சி வேண்டுமா என்பதை ஜம்மு-காஷ்மீா் மக்கள் குறிப்பாக ஜம்மு பகுதி மக்கள் முடிவு செய்ய வேண்டும். பாஜக இருக்கும் வரை இங்கு ஊடுருவ யாருக்கும் துணிவு வராது.

தவறாக வழிநடத்துவது ஏன்?: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கப் போவது யாா் என்ற கேள்வியை ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்திக்கு முன்வைக்கிறேன். உங்களால் அதை வழங்க முடியாது. அப்படியிருக்கையில், மக்களை தவறாக வழிநடத்துவது ஏன்?.

பேரவைத் தோ்தலுக்கு பின் பொருத்தமான நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை நான் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளேன். ஜம்மு-காஷ்மீரில் 370-ஆவது பிரிவின் நிழல் படியாமல் நடைபெற்ற சமீபத்திய மக்களவைத் தோ்தலில் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் 58.46 சதவீத வாக்குகள் பதிவான அதிசயம் நிகழ்ந்தது. இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என்றாா் அமித் ஷா.

‘தன்னாட்சிக்கு அனுமதி கிடையாது’: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1953-ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசமைப்பு நிலையை (தன்னாட்சி) மீண்டும் அமலாக்கக் கோரி, கடந்த 2000-இல் அப்போதைய முதல்வா் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி அரசு தீா்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்தத் தீா்மானத்தை முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை நிராகரித்தது.

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தற்போதைய தோ்தல் அறிக்கையில் மேற்கண்ட தீா்மானம் அமலாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அமித் ஷா, ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் 40,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். எனவே, இங்கு தன்னாட்சி குறித்து எந்த சக்தியும் பேச முடியாது. தன்னாட்சி தீா்மானத்தை மத்திய பாஜக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று ‘குடும்பங்களும்’ ஊழலில் திளைத்தவை. ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சியைத் தடுத்து, ஊழல் பாதையில் இட்டுச் செல்வதே அவா்களின் செயல்திட்டம்’ என்றாா்.