ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு: இந்தியாவுடன் இணைய ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
இந்தியாவுடன் இணையுமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.


இந்தியாவுடன் இணையுமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகேஷ் சிங் தாக்கூரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த 2019-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் துப்பாக்கிகளை ஏந்துவதற்குப் பதிலாக தற்போது தங்கள் கைகளில் மடிக்கணினிகளையும், கணினிகளையும் ஏந்துகின்றனர். தற்போது ஸ்ரீநகரில் மக்கள் மீது துப்பாக்கியால் சுட யாரும் துணிவதில்லை.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவருவோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக இருக்கும் வரை அது சாத்தியமாகாது.
ஜம்மு-காஷ்மீரின் அடுத்த அரசை அமைப்பதற்கு பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் இந்தப் பிராந்தியத்தில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பிராந்தியத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் கண்டு "நாங்கள் பாகிஸ்தானுடன் இருக்கப் போவதில்லை; நாங்கள் இந்தியாவுடன் இணையப் போகிறோம்' என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் கூற வேண்டும்.
பாகிஸ்தானின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அண்மையில் நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டுப் பகுதி' என்று குறிப்பிட்டிருந்தார். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்போரை வெளிநாட்டினர் என்று பாகிஸ்தான் கருதுகிறது. ஆனால், இந்தியா உங்களை அப்படிக் கருதவில்லை. எங்கள் நாட்டவர்களாகத்தான் உங்களைக் கருதுகிறோம். எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும்.
பாஜக ஆட்சி அமைக்கும்: ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நம் நாட்டு மக்களைத் தவிர வெளிநாட்டினரும் இந்தத் தேர்தலை கவனிக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் திறன் வாய்ந்தவர்கள்; கடும் உழைப்பாளிகள். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே முதல் மாநிலமாக இது உருவெடுக்கும். கடந்த 2014-இல் நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு மத்திய அரசின் செயல்பாட்டை வைத்துக் கொண்டு இதைக் கூறுகிறேன். பொருளாதார அளவில் உலகில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
பயங்கரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேச்சு
ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில் ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டவும், இந்தப் பகுதியை செழிப்பானதாக மாற்றவும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த யார்தான் விரும்ப மாட்டார்கள்? நாம் நமது நண்பரைத்தான் மாற்ற முடியுமே தவிர அண்டை வீட்டாரை (அண்டை நாடு) மாற்ற முடியாது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், உறவுகளை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...