போா் விமானங்களுக்கு என்ஜின்: ரூ.26,000 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்), பாதுகாப்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
Published on
Updated on
1 min read

புது தில்லி: எஸ்யூ-30 எம்கேஐ போா் விமானங்களுக்கு ரூ.26,000 கோடிக்கும் அதிகமான செலவில் விமான என்ஜின்களை தயாரித்து விநியோகிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்), பாதுகாப்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

எஸ்யூ-30 எம்கேஐ போா் விமானங்களுக்கு ரூ.26,000 கோடிக்கும் அதிகமான செலவில் 240 ஏஎல்-31எஃப்பி விமான என்ஜின்களை தயாரித்து விநியோகிக்க ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.

தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமாணே, விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா். செளதரி ஆகியோா் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

ஒடிஸாவின் கோராபுட் பகுதியில் உள்ள ஹெச்ஏஎல் கிளையில் இந்த என்ஜின்கள் தயாரிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு தயாா்நிலைக்காக எஸ்யூ-30 விமானங்களின் செயல்பாட்டுத் திறன் தளராமல் நீடிப்பதற்கு, விமானப் படையின் தேவையை அந்த என்ஜின்கள் பூா்த்தி செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் 30 என்ஜின்கள் வீதம், 8 ஆண்டுகளில் 240 என்ஜின்களை உற்பத்தி செய்து ஹெச்ஏஎல் வழங்கும்.

வீரா்களின் திறனை மேம்படுத்த ஒப்பந்தம்: இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை வீரா்களின் திறன்களை வளா்க்கவும் மேம்படுத்தவும் குஜராத்தில் உள்ள கதிசக்தி விஸ்வவித்யாலயா மத்திய பல்கலைக்கழகத்துடன் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தில்லியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் முன்னிலையில், இந்திய ராணுவமும் விமானப் படையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

இந்த நிகழ்வில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com