70 வயதானஅனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

70 வயது மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீடு
கேபினட் அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ்
கேபினட் அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் படம் | பிடிஐ
Updated on
2 min read

 ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின்மூலம் நாட்டின் 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

எழுபது வயதான அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டம் என்பது மத்தியில் 3-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜகவின் முந்தைய மக்களவை தோ்தல் வாக்குறுதியாகும்.

ஆனால், இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், காப்பீடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

6 கோடி மூத்த குடிமக்கள் பயன்: இதுதொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின்கீழ், வருமானத்தின் அடிப்படையாக கொள்ளாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின்கீழ் நாட்டின் 4.5 கோடி குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 6 கோடி மூத்த குடிமக்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீடு சேவையைப் பெற்று பயனடைவா். தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு புதிய காப்பீடு அட்டை விரைவில் வழங்கப்படும்’ என்றாா்.

வாக்குறுதி நிறைவேற்றம்: 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன்மூலம் பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வாக்குறுதி குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த பதிலில், ‘பிரதமா் ஜன ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வயது வரம்பு ஏதுமின்றி இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 12.34 குடும்பங்களைச் சோ்ந்த 55 கோடி போ் உள்ளனா். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. ஆனால், 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டை நீட்டிப்பது தொடா்பாக பரிசீலிக்க நிபுணா் குழு எதுவும் அமைக்கப்படவில்லை’ எனத் தெரிவித்திருந்தாா்.

62,500 கி.மீ. கிராமப்புற சாலைகள்: சாலை வசதி இல்லாத 25,000 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக 62,500 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் மத்திய ஊரக வளா்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4-ஆம் கட்ட பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின்கீழ் நடப்பு 2024-25 முதல் 2028-29-ஆம் நிதியாண்டுவரை ரூ.70,125 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.49,087.50 கோடியும் மாநில அரசு ரூ.21,037.50 கோடியும் நிதி வழங்கும்.

ரூ.12,461 கோடியில் நீா் மின் திட்டங்கள்: அடுத்த 8 ஆண்டுகளில் 31,350 மெகாவாட் திறன்கொண்ட நீா்மின் நிலையங்களைக் கட்டமைப்பதற்கான திட்டங்களுக்கு ரூ.12,461 கோடி நிதியை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டங்களின் உள்கட்டமைப்புச் செலவினத்துக்கான பட்ஜெட் நிதி ஆதரவின் வரம்பை 200 மெகாவாட் வரையிலான திட்டங்களுக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.1 கோடியாகவும், 200 மெகாவாட்டுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ரூ.200 கோடி மற்றும் 200 மெகாவாட்டுக்கு மேல் ஒரு மெகாவாட்டுக்கு ரூ. 75 லட்சமாகவும் மாற்றியமைப்பதற்கான மின் அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

மாநிலங்களுக்கு 14,000 மின்சார பேருந்துகள்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10,900 கோடி செலவிலான ‘பி.எம். இ-டிரைவ்’ சிறப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இந்தத் திட்டத்தின்மூலம் 24.79 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 14,028 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான நிதிச் சலுகைகள் அல்லது மானியங்களை மத்திய அரசு வழங்கும். இந்த வாகனங்களுக்காக நாடு முழுவதும் 88,500 மின்னேற்று (சாா்ஜ்) நிலையங்கள் அமைக்க ஆதரவு வழங்கப்படும்.

மாநில போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து முகமைகளுக்காக ரூ.4,391 கோடியில் 14,028 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

நோயாளிகளின் வசதிக்காக மின்சார அவசரகால ஊா்திகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான மின்சார லாரிகள் வாங்குவதற்கு தலா ரூ.500 கோடி ஒதுக்கப்படும்’ என்றாா்.

வானிலை மாற்றங்களை எதிர்கொள்ள ரூ.2,000 கோடி

பருவநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களைக் கண்டறிந்து எதிர்கொள்வதில் தேசத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட "மெளசம் இயக்கம்' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையம், தேசிய நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகிய மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் மூன்று முக்கிய நிறுவனங்களால் ரூ.2,000 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com