
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நிபந்தனையுடன் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து 33வது நாளாக போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதாவை சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, முதல்வர் மமதா பானர்ஜி அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.
பிரச்னையை பேசி தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு மமதா பேனர்ஜி அனுப்பிய கடிதத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மருத்துவர்கள், பேச்சுவார்த்தை என்பது மூடிய கதவுகளுக்குப் பின் இல்லால், திறந்தவெளியில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
பலியான பெண்ணின் குடும்பத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும், மருத்துவத் துறையில் இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநில முதன்மைச் செயலாளர் மருத்துவர்களுக்கு விடுத்த அழைப்பில், மாநில தலைமைச் செயலகமான நபண்ணாவில் 12 - 15 மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு குறிப்பிட்டிருந்தார். இன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்களின் விவரங்களை தருமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால், கூடுதல் மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதலில், மாநில சுகாதாரத் துறைச் செயலாளரிடமிருந்து செவ்வாயன்று வந்த மின்னஞ்சலை ஏற்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். யாரை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி வருகிறோமோ, அவரே மின்னஞ்சல் செய்வது எங்களை அவமதிப்பதாக உள்ளதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.