கல்பெட்டா: வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து நிராதரவாக விடப்பட்ட ஸ்ருதிக்கு, மிச்சம் இருந்த ஒரு உறவையும் சாலை விபத்து என்ற பெயரில் பிடுங்கிச் சென்றிருக்கிறது.
ஜூலை 30ஆம் தேதி சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, தனது பெற்றோர், சகோதரி உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தில் 9 பேரை இழந்து நிராதரவாக நின்றார் ஸ்ருதி.
தனக்கு தூண் போல தாங்க ஒரே ஒரு உறவு இருக்கிறது என்று நினைத்திருந்த ஸ்ருதிக்கு அதையும் பிடுங்கிச் சென்றிருக்கிறது சாலை விபத்து.
புதன்கிழமை, ஸ்ருதியும், வருங்கால கணவர் 24 வயதான ஜென்சனும் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நேரிட்ட விபத்தில், ஜென்சன் மரணமடைந்தார்.
ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழந்தபோது, ஒரே ஆறுதலாக இருந்து, மீளாத் துயரிலிருந்து ஸ்ருதியை மீட்டு வந்த ஜென்சன், சாலை விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத் திட்டுகள் உருவானதால், அவர் மரணமடைந்திருக்கிறார்.
ஸ்ருதிக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கல்பெட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஸ்ருதி- ஜென்சன் இடையே ஜூன் 2ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, 10 ஆண்டுகளுக்கும் மேலான காதல், திருமணம் வரை வந்ததால், இரு வீட்டாரும் மிகுந்த மகிழ்ச்சியோடு திருமணத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெறும் இரண்டு மாதத்தில், ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டிப்போடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு, குடும்பத்தில் 9 பேரை இழந்துவிட்டார் ஸ்ருதி. நிலச்சரிவு நேரிட்டபோது, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வந்ததால் அவர் மட்டும் தப்பியிருக்கிறார்.
ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு ஒரே ஒரு உறவாக நின்று ஒட்டுமொத்த வலிகளையும் கடக்க உதவியிருந்தது ஜென்சன்தான். குடும்பத்தை இழந்த ஸ்ருதிக்கு, அடுத்து திருமணம் நடந்தால்தான் அந்த இழப்பிலிருந்து வெளியே வருவார் என முடிவெடுத்த ஜென்சன் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்துவந்துள்ளார். ஆனால், செவ்வாயன்று இருவரும் சென்ற வேன், தனியார் பேருந்து மீது மோதியதில், வேனை ஓட்டி வந்த ஜென்சன் படுகாயமடைந்தார்.
தலையில் படுகாயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால், ஸ்ருதியின் திருமணம், குடும்பம் என்ற அடுத்த கனவும் சின்னாபின்னமாகியிருக்கிறது.