உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல பூஜையில் பிரதமர் பங்கேற்றிருப்பது தவறான தகவலை தருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறித்து வழக்குரைஞர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆனால், இந்த நிகழ்வில் எந்த குற்றமும் இல்லை என்றும், அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் ஏற்கனவே பல நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றிருக்கிறார்கள், ஒரே மேடையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும் பாஜக முட்டுக்கொடுத்துள்ளது.
டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விநாயகருக்கு ஆராத்தி காட்டியுள்ளார். பிரதமர் மோடி பகிர்ந்த இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பரவலாக தலைவர்கள் மற்றும் மூத்த வழக்குரைஞர்களின் விமர்சனங்களும் வைரலாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. சீதாராம் யெச்சூரி காலமானார்
பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தில்லி இல்லத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, பிரதமர் மோடியை டி.ஒய். சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் வீட்டில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, விநாயகருக்கு ஆரத்திக் காட்டினார். இந்த விடியோவை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கடவுள் விநாயகர், நாம் அனைவரையும் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிப்பாராக என்று பதிவிட்டிருந்தார்.
அந்த விடியோவில், பிரதமர் மோடியுடன் டி.ஒய். சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் உள்ளனர்.
இதற்கு, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், தனது கடுமையான எதிர்ப்பை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தனிப்பட்ட முறையில் தனது இல்லத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க அனுமதியளித்திருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் மத்திய அரசு செயல்படுவதை உறுதி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களின் இந்த செயலானது நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்பியிருக்கிறது, அதனால்தான் நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடியின் விடியோவை இணைத்துப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சிவ சேனை (உத்தவ் அணி) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் கூறுகையில், விநாயகர் பூஜை நாடு முழுவதும் நடக்கிறது. மக்கள் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் செல்வர். ஆனால், பிரதமர் மோடி எத்தனை பேர் இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்று தெரியவில்லை, எனினும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்துக்குச் சென்று ஒன்றாக பூஜை செய்திருக்கிறார்கள்.
அரசியலமைப்பைக் காக்க வேண்டியவர்கள், அரசியல்வாதிகளை சந்தித்தால், அது மக்கள் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதாவது, மகாராஷ்டிர வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எதிர் தரப்பில் பிரதமர் மோடி இருப்பதால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. எனவே இந்த வழக்கிலிருந்து சந்திரசூட் விலகிவிடவேண்டும். இந்த நிலையில், சந்திரசூட் எங்களுக்கு நியாயம் வழங்குவாரா? வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படும், சட்டவிரோத ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கும். மகாராஷ்டிரத்தில் நடக்கும் சட்டவிரோத ஆட்சிக்கு பிரதமர் மோடி முழு ஆதரவையும் கொடுத்துள்ளார், எனவே, பிரதமர் மோடியுடனான தொடர்பை சந்திரசூட் நேற்று வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டார், இதனால் மகாராஷ்டிர மக்களிடையே ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா இது பற்றி பேசுகையில், ஒவ்வொரு அமைப்பின் சுதந்திரமும் வெறும் கோட்பாடு ரீதியிலானதாக மட்டும் இருக்கக்கூடாது, அது வெளிப்படையானதாக இருக்க வேண்டும், கணபதி பூஜையில் கலந்துகொள்வது ஒருவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும், இது ஒரு தவறான தகவலை மக்களுக்கு அனுப்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஸத் பூனாவாலா கூறியிருக்கும் விளக்கத்தில், 2009ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அளித்த இஃப்தார் விருந்தில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஜி பாலக்கிருஷ்ணன் பங்கேற்றார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கணபதி பூஜையில் பங்கேற்பது ஒன்றும் குற்றமல்ல, பல நிகழ்வுகளில் நீதித் துறையினரும் அரசியல்வாதிகளும் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். ஆச்சரியமாக, நிகழ்ச்சிகள், திருமணம், பொது நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், பிரதமர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் சந்தேகம் எழுகிறது என்று விமர்சிக்கிறார்கள் என விளக்கம் கொடுத்துள்ளார்.