சீதாராம் யெச்சூரி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி
Published on
Updated on
1 min read

புது தில்லி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை பிற்பகல் 3.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது நுரையீரலில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சுவாச நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவா்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை கடந்த ஒரு சில நாள்களாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

சீதாராம் யெச்சூரியின் பின்னணி

சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். சீதாராம் யெச்சூரி 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரம், தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டார்.

1974ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். படிப்படியாக முன்னேறி, கட்சியின் பொதுச்செயலராக உயர்ந்தார். மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் பியூரோ என பல்வேறு உயர் பொறுப்புகளையும் சீதாராம் யெச்சூரி வகித்துள்ளார்.

உடல்நிலை பாதித்திருந்தபோதும், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட யெச்சூரி, தொடர்ந்து மூன்று முறை பொதுச் செயலராக தேர்வுசெய்யப்பட்டு மறையும் வரை அந்தப் பொறுப்பை வகித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள், சீதாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு முக்கிய தலைப்புகளில் உரையாற்றி, மக்கள் பிரச்னைகளை அவைக்குக் கொண்டு வந்துள்ளார்.

பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஏராளமான புத்தகங்களையும் சீதாராம் யெச்சூரி எழுதியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது பொதுச் செயலராக, பிரகாஷ் கரத்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றார். இந்தியா கூட்டணி அமைவதில் இவரது பங்கு பெரிதும் இருந்தது குறிப்பிடத்தக்கது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.