திகார் சிறையில் இருந்து இன்று (செப்.13) ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு திகார் சிறைக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இருப்பினும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் செப். 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தீர்ப்பு இன்றைய தினத்துக்கு (செப்.13) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மாலை திகார் சிறையில் இருந்து அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருள்படுத்தாமல் அவரது ஆதரவாளர்கள் குடைகளுடன் வந்து அவரை வரவேற்று கோஷமிட்டனர்.
அரவிந்த் கேஜரிவால் வெளியே வந்ததைத் தொடர்ந்து அவரது வீட்டின் வெளியே கூடிய பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.