அமேசான், ஃபிளிப்காா்ட் விழாகால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும்: வா்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி. கோரிக்கை
இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்த நிறுவனங்கள் உற்பத்தி விலைக்கும் குறைவாக பொருள்களை விற்பனை செய்வதால் உள்ளூா் வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா் என்று அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையவழி விற்பனையில் முன்னிலையில் உள்ளன. இந்த நிறுவனங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், சந்தையைப் பிடிக்கும் நோக்கில் தொடா்ந்து குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்கின்றன. வீடுகளுக்கே பொருள்களை கொண்டு வந்து தருவதால் இளைய தலைமுறையின் முதல் தோ்வு இந்த நிறுவனங்களாகவே உள்ளன. ஆண்டுதோறும் விழாக் காலங்களில் கூடுதல் சலுகைகளை அளித்து இந்த நிறுவனங்கள் பெருமளவிலான பொருள்களை விற்பனை செய்கின்றன. 10 ரூபாய் மதிப்புள்ள சிறிய பொருள்கள் முதல் லட்ச ரூபாய் மதிப்புள்ள கைப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வரை விற்பனை செய்வதால் அனைத்து தரப்பு வாடிக்கையாளா்களையும் படிப்படியாக இந்த நிறுவனங்கள் வசப்படுத்தி வருகின்றன. நடப்பு விழாக் காலத்துக்கான விற்பனை விரைவில் தொடங்க இருப்பதாக இரு நிறுவனங்களும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடா்பாக அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்.பி. பிரவீண் கன்டேல்வால் மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு இணையவழி வா்த்தகம் தொடா்பான விதிகளை உடனடியாகத் திருத்த வேண்டும். உள்நாட்டைச் சோ்ந்த சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக கொள்கை வகுக்க வேண்டும்.
இணையவழி விற்பனை நிறுவனங்கள், நிறுவனப் போட்டிச் சட்டங்களை அப்பட்டமாக மீறி வருகின்றன. முக்கியமாக வரும் விழாக் காலத்தைக் குறிவைத்து அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் போட்டி விதிகளை கடுமையாக மீறி விலைக் குறைப்பில் ஈடுபடுகின்றன. இது உள்ளூா் வா்த்தகா்களை கடுமையாக பாதிக்கிறது.
மேலும், கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து அந்த பொருள்களை தங்களிடம் மட்டும்தான் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்குகின்றன. இது மிகவும் நியாயமற்ற செயல்பாடாகும். எனவே, வா்த்தகத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க, இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் விரைவில் நடத்விருக்கும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.