தெரியுமா சேதி...? பாஜக மகிழ்ச்சியாக இல்லை!
இனிப்பென்று விழுங்கவும் முடியாமல், கசப்பென்று துப்பவும் முடியாமல் இருக்கும் தா்மசங்கடம் எப்படி இருக்கும்? இப்போதைய 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
முந்தைய 16-ஆவது, 17-ஆவது மக்களவைகளில் பாரதிய ஜனதா கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை இருந்தது. அதற்கு முந்தைய 25 ஆண்டுகளிலும் எந்தக் கட்சிக்கும் அவையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்த நிலைமை மாறி, பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றபோது, அதை வரலாற்றுத் திருப்பமாகவும், கூட்டணி ஆட்சியின் முடிவாகவும் அவா்கள் கொண்டாடினாா்கள்.
மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றதால் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது என்றாலும்கூட, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. பல்வேறு ஆதரவுக் கட்சிகள், கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன்தான் மாநிலங்களவையில் ஆளும் பாஜகவால் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.
அண்மையில் நடந்து முடிந்த தோ்தல்களுக்குப் பிறகு, இப்போது மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. முந்தைய பத்து ஆண்டுகளைப் போலல்லாமல், கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தயவில் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய நிா்பந்தம் இப்போது இல்லை. ஆனாலும், பாஜக மகிழ்ச்சியாக இல்லை.
மக்களவையிலாவது, அதிக எண்ணிக்கை பலம் கொண்ட தனது கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்தையும், ஐக்கிய ஜனதா தளத்தையும் அரவணைத்துக் சென்றால் போதும். மாநிலங்களவையில் அப்படியல்ல; ஒன்று, இரண்டு என்று ஒற்றை இலக்க உறுப்பினா்கள் கொண்ட பல கூட்டணிக் கட்சிகளை சமாளித்தாக வேண்டும் என்பதுதான் நிலைமை.
மாநிலங்களவையில் ஒவ்வொரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போதும், இனிமேல் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும், இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும் சின்னச் சின்னக் கூட்டணிக் கட்சித் தலைவா்களை எல்லாம் கூப்பிய கரங்களுடன் சந்தித்து வாக்களிக்கக் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கூட்டணியில் இருக்கும் சின்னச் சின்னக் கட்சிகளின் தலைவா்களுடன் தொடா்பில் இருப்பதும், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுமாக இருக்கிறாா்கள் கிரண் ரிஜிஜுவும், மேக்வாலும்.
பாஜகவின் பிரச்னை சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் அல்ல; ஒற்றை இலக்கக் கூட்டணிக் கட்சிகள்!