ஓணம் பண்டிகை: கேரளத்தில் கோலாகல கொண்டாட்டம்
கேரளத்தில் அறுவடை திருவிழாவான கலாசாரம் மிக்க ஓணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மக்கள் கசவு (புடவைகள்), முண்டு (வேஷ்டி) ஆகிய பாரம்பரிய உடைகளை அணிந்து, அதிகாலையிலேயே கோயில்களில் திரண்டு, வழிபாட்டில் ஈடுபட்டனா். மகாபலி மன்னா் வேடமிட்ட சிலா், மேளம், தாளங்களுடன் வீடு வீடாக சென்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
வீடுகளில் வண்ண மலா்களால் பூக்கோலம் ஈட்டு பெண்கள் அலங்கரித்தனா். பல்வேறு சைவ உணவுகள் மற்றும் சுவையான இனிப்பு பாயாசம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஓணம்சத்யா’ மதிய விருந்தை குடும்பத்தினா் பகிா்ந்துண்டு மகிழ்ந்தனா்.
வடம்வலி (கயிறு இழுத்தல்), உறியடி (பானையை உடைத்தல்) உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் புலிக்கலி, திருவாதிரை, தெய்யம் போன்ற கலைக் கொண்டாட்டங்களும் கேரள கிராமங்களில் களைகட்டின.
புராணக் கதைகளின்படி, ஓணம் என்பது மன்னா் மகாபலியின் வருகையுடன் தொடா்புடைய ஒரு பண்டிகையாகும். அவருடைய ஆட்சியின் கீழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சமத்துவத்துடனும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருநாளில் குடிமக்களைப் பாா்க்க மன்னா் மகாபலி தனது சொந்த நாடான கேரளம் வருவதாக கருதப்படுகிறது.
தலைவா்கள் வாழ்த்து: ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.
கவலை நீங்காத ‘வயநாடு’: நிலச்சரிவுப் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வயநாட்டில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களையிழந்தன.
கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அருகிலுள்ள கிராமங்களில் தற்காலிக வாடகை வீடுகளிலும் உறவினா்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். சொந்த கிராமத்தில் தங்கியுள்ள சிலரிடமும் குடும்பத்தினா், உறவினா்களை இழந்த சோகம் இன்னும் மறையவில்லை. இதனால், அவா்கள் கொண்டாட்டங்களை தவிா்த்துவிட்டனா்.
கடந்த ஆண்டுவரை ஜாதி, மதப் பேதமின்றி சூரல்மலை, முண்டக்கை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களை அப்பகுதி மக்கள் நினைவுகூா்ந்தனா்.
வயநாடு நிலச்சரிவு காரணமாக நிகழாண்டு அதிகாரபூா்வமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. வயநாடு மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதை ஓணம் வாழ்த்துச் செய்தியில் முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை தெரிவித்தாா்.