
பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா.
அல்லு அர்ஜூனின் 'புட்ட பொம்மா...' புஷ்பா பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநரும் இவரே ஆவார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா..' பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருது வென்றிருந்தார்.
இந்நிலையில், 40 வயதான நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது பெண் நடன உதவி இயக்குநர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பகுதி காவல் நிலையத்தில், மூன்று பிரிவுகளின் கீழ் ஜானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் பாலியல் வன்கொடுமை (376) கொலை மிரட்டல் (506) தாமாக முன்வந்து உடல்ரீதியாக துன்புறுத்தியது (323) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிக்கடி பாலியல் வன்கொடுமை
பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் எனக்கு அறிமுகமான ஜானி மாஸ்டர், அவரின் நடனக் குழுவில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அவரின் குழுவின் உதவி நடன இயக்குநராக இணைந்தேன்.
மும்பையில் நடந்த படப்பிடிப்புக்கு ஜானி மாஸ்டர் மற்றும் அவரின் மற்ற இரு உதவி நடன இயக்குநர்களுடன் சென்றேன். அங்கு தங்கியிருந்த விடுதியில் என்னை முதல்முறையாக பாலியல் வன்கொடுமை செய்தார் ஜானி மாஸ்டர். இது குறித்து வெளியே கூறினால் நடனத் துறையில் எதிர்காலமே இல்லாமல் செய்துவிடுவேன் என மிரட்டினார்.
ஒருமுறை படப்பிடிப்பின்போது ஓய்வு வாகனத்தில் இருக்கும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். நான் மறுப்பு தெரிவித்ததும் ஆக்ரோஷமாக கூச்சலிட்டு என் முடியை இழுத்து கண்ணாடியில் முட்டினார்.
நடன இயக்குநர் ஜானியிடம் 6 மாதங்களாக உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது சென்னை, மும்பை, ஹைதராபாத் என வெளிப்புற படப்பிடிப்பின்போதெல்லாம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் ஹைதராபாத்தின் நார்சிங்கி பகுதியிலுள்ள எனது வீட்டிற்கு நான் சென்றுவிட்டேன். ஆனால், அங்கும் பலமுறை வந்து பாலியல் இச்சைகளுக்கு ஆளாகுமாறு மிரட்டினார். இதனை வெளியே கூறினால் வாய்ப்புகளை ஏற்படாதவாறு செய்துவிடுவேன் என உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் மனைவியும் உடல் ரீதியாக என்னைத் துன்புறுத்தியுள்ளார்.
பின்னர் எனக்கு சினிமாவில் சில வாய்ப்புகள் வந்தது. அதில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே பாதியில் நீக்கப்பட்டேன். நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு ஜானி மாஸ்டர் வந்து என்னை மிரட்டுவதுடன், எனக்கு கிடைத்த வாய்ப்பையும் அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி பறித்துவிடுவார். ஆக. 28ஆம் தேதி என் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்தது. அதைக் கண்டு நான் அஞ்சினேன். என் வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டினார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கா?
இது குறித்து துணை ஆணையர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாவது, ''பெண் அளித்த புகாரை முழுமையாகப் பதிவு செய்துள்ளோம். அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளோம். ஜானி மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்'' எனக் குறிப்பிட்டார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தபோது பெண், 18 வயதை பூர்த்தி அடையாத சிறுமி என்பதால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லையா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த துணை ஆணையர், உரிய ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு போக்சோ வழக்கு பதியப்படும் எனக் கூறினார்.
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியைச் சேர்ந்தவராவார். பாலியல் புகாரைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு ஜன சேனா கட்சி சார்பில் ஜானி மாஸ்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத் திரைத்துறையில் பாலியல் புகார்கள்
மலையாளத் திரைத் துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நீதிபதி ஹேமா குழு கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில் திரைத் துறையைச் சேர்ந்த மிகப்பெரும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
மலையாளத் திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க முன்வர வேண்டும் எனக் கோரப்பட்டது. பாலியல் புகார்களை விசாரிக்க கேரள காவல் துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கேரள மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்தனர்.
நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு, நிவின் பாலி ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.