ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுளது. முதல் கட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 100 நாள்களுக்குள், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ராம்நாத் கோவிந்த் அறிக்கை
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்பித்தது.
18,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என இரு கட்டங்களாக தோ்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவது, நாட்டின் ஜனநாயக அடிப்படையை வலுப்படுத்துவதோடு, வளா்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு தூண்டுகோலாக அமையும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்து, பொதுவான வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 325-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
ஒரே நேர தோ்தல்களின் சுழற்சியை உறுதிசெய்ய சட்டபூா்வ வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தொங்கு மக்களவை, ஆட்சி கவிழ்வது போன்ற சூழல்களின்போது புதிதாக மக்களவைத் தோ்தலை நடத்தலாம். அதன்பிறகு அமையும் புதிய மக்களவையின் பதவிக் காலம், முந்தைய மக்களவையின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு மட்டுமே இருக்கும். இதுபோன்ற தருணங்களில், மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக் காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும்.
இந்த வழிமுறையை அமல்படுத்த அரசமைப்புச் சட்டத்தின் 83-ஆவது பிரிவு (நாடாளுமன்றத்தின் பதவிக் காலம்), 172-ஆவது பிரிவில் (பேரவைகளின் பதவிக் காலம்) திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இத்திருத்தங்களுக்கு பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயர்நிலைக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முன்னாள் நிதி ஆணையத் தலைவா் என்.கே.சிங், முன்னாள் மக்களவை தலைமைச் செயலா் சுபாஷ் காஷ்யப், மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனா்.
இக்குழு உறுப்பினராக அப்போதைய மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி நியமிக்கப்பட்டபோதிலும், அந்தப் பொறுப்பை ஏற்க அவா் மறுத்துவிட்டாா்.
இந்த குழு, 6 மாதங்களுக்கும் மேலாக விரிவான ஆய்வை மேற்கொண்டு, சட்ட ஆணையம், மாநில தோ்தல் ஆணையங்கள், அரசியல் கட்சிகள், துறைசாா் நிபுணா்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.