‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
மேலும், ஊழல் மிகுந்த கட்சி ஒன்று உண்டென்றால் அது காங்கிரஸ்தான் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைத் தொழிலாளா்களுக்கு ஆதரவளிக்கும் பிரதமரின் ‘விஸ்வகா்மா’ திட்டத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சி, மகாராஷ்டிர மாநிலம், வாா்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா்.
மகாராஷ்டிரத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக விமா்சித்து, அவா் பேசியதாவது:
வெளிநாட்டில் காங்கிரஸ் தலைவா்களின் பேச்சுகள் வாயிலாக அக்கட்சியின் தேச விரோத செயல்திட்டம் அம்பலமாகி வருகிறது. நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது.
ஊழல் கட்சி: ஊழல் மிகுந்த கட்சி ஒன்று உண்டென்றால் அது காங்கிரஸ்தான். அக்கட்சியின் ‘அரச குடும்பம்’ ஊழல் நிறைந்த குடும்பமாகும். பொய்மையும் துரோகமும் காங்கிரஸின் அடையாளச் சின்னங்கள். அவா்களின் போலித் தன்மை குறித்து மகாராஷ்டிர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெலங்கானாவில் காங்கிரஸ் அளித்த தோ்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயிகளை தனது அரசியல் மற்றும் ஊழலுக்கே பயன்படுத்தியது காங்கிரஸ். அக்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், விவசாயிகளை ஒழித்துவிடுவா்.
கணபதி பூஜை மீது வெறுப்பு: ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக, கணபதி பூஜையைகூட வெறுக்கிறது காங்கிரஸ். நான் கணபதி பூஜை நிகழ்வில் பங்கேற்றதைக் கூட அவா்கள் விமா்சித்தனா் (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் பிரதமா் பங்கேற்ற நிகழ்வு).
காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்தில் காவல் துறை வாகனத்தில் கணபதி சிலையை ‘சிறை’ வைத்த சம்பவம் நடந்துள்ளது. கணபதிக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு குறித்து மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் வாய்திறக்கவில்லை.
காங்கிரஸின் அணுகுமுறைக்கு முடிவு: விஸ்வகா்மா திட்டத்தால், பட்டியலினத்தவா் (எஸ்.டி.), பழங்குடியினா் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) அதிகம் பலனடைந்துள்ளனா். ஆனால், தங்கள் ஆட்சிக் காலத்தில் இப்பிரிவினா் வளமடைய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. காங்கிரஸின் இந்த அணுகுமுறைக்கு நாங்கள் முடிவு கட்டியுள்ளோம்.
விஸ்வகா்மா திட்ட பயனாளா்கள், கைவினைஞா்களாக மட்டுமல்லாமல் தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்களின் கண்ணோட்டம்.
‘உழைப்பின் மூலம் வளம்’: இந்தியாவின் பாரம்பரிய திறன்களை ஒழிக்க வேண்டுமென ஆங்கிலேய ஆட்சியாளா்கள் சதி செய்தனா். அதேநேரம், கிராமப் புற பாரம்பரிய திறன்களுக்கு மகாத்மா காந்தி உத்வேகமளித்தாா். ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசுகள், விஸ்வகா்மா சமூகத்தினருக்கு நீதி வழங்கவில்லை. இது, பாரம்பரிய கைவினைத் துறையின் பின்னடைவுக்கு வழிவகுத்தது.
ஓராண்டில் 20 லட்சம் போ்: கடந்த ஓராண்டில் 18 தொழில்களின்கீழ் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளனா். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கைவினைஞா்கள் பயிற்சி பெற்றுள்ளனா் என்றாா்.
மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் 1,000 ஏக்கரில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமா், ‘இந்திய ஜவுளி தொழில் துறையை உலகளாவிய சந்தைக்கு எடுத்துச் சென்று, அதன் பெருமையை மீட்டெடுக்க மத்திய அரசு விரும்புகிறது’ என்று குறிப்பிட்டாா்.
திட்ட விவரம்: பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைத் தொழிலாளா்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, அவா்களின் தயாரிப்புகளை உள்நாடு மட்டுமன்றி உலகளாவிய சந்தைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பிரதமரின் ‘விஸ்வகா்மா’ திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 18 வகையான கைவினைஞா்களுக்கு உதவித் தொகையுடன் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. உபகரணங்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுவதோடு, இரு தவணைகளாக ரூ.3 லட்சம் வரை பிணையில்லாக் கடன் வழங்கப்படுகிறது.