கர்நாடகம் முழுவதும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தின் திருமலை-திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளான நிலையில் கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடத்தின் சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி நெய்யைப் பயன்படுத்த வேண்டும்.
கர்நாடகத்தில் உள்ள 1,80,000 கோயில்களில் 35,500 கோயில்கள் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் உள்ளன.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை உணவுக்கான பகுப்பாய்வு கற்றல் மையம் நடத்திய ஆய்வக ஆய்வில், ஜூலை 2024 இல் ஆந்திரத்தில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட நெய்யின் நான்கு மாதிரிகளில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலப்படங்களில் சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பிற பொருள்களும் கலக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.