நக்சல் வன்முறையை எதிர்த்து, கண்டனம் தெரிவிக்கும் விடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், பாஜக அமைச்சர் அமித் ஷா.
சத்தீஸ்கரில் நடந்த நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரை, தனது வீட்டுக்கு அழைத்த மத்திய உள்துறை அமைச்சர், அவர்களிடம் உரையாற்றினார். அமித் ஷா பேசியதாவது, ``நாட்டில் நிலவி வரும் நக்சல்களின் வன்முறையும் சித்தாந்தமும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
வடகிழக்கில் உள்ள பயங்கரவாதிகள் செய்ததுபோல் வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களை நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை, நீங்கள் கேட்கவில்லை என்றால், உங்களின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் ஒரு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒரு காலத்தில், பசுபதிநாத் (நேபாளம்) முதல் ஆந்திரம் வரையில் வழித்தடத்தை அமைக்க நக்சல்கள் திட்டமிட்டிருந்தனர்; ஆனால், அவர்களின் திட்டத்தை மோடி அரசு அழித்து விட்டது.
சத்தீஸ்கரில், இப்போது 4 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் பிரச்னை இருப்பதால், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டத்தை உள்துறை அமைச்சகம் விரைவில் உருவாக்கும். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் மற்றும் பிற துறைகளில், எங்களால் முடிந்தவரை உங்களுக்கு உதவுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.