
தலைநகர் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி இன்று மாலை பதவியேற்க உள்ளார்.
கலால் கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாள்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியே வந்த இரண்டு நாள்களிலேயே தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்த அதிஷியை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று கேஜரிவால் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரினார்.
இந்த நிலையில், தில்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவியேற்பார் என்றும் அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேஜரிவாலின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அதிஷியை தில்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமான நியமனம் செய்தார்.
தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி தில்லியின் இளைய முதல்வர் ஆவார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி தேர்வாகியுள்ளார்.
தில்லி அமைச்சரவையில் தனது குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கும் வகையில், நிதி, நீா், கல்வி மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பல முக்கிய இலாகாக்களை அதிஷியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.