நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா அழைப்பு
‘நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக்கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்


‘நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக்கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்’ என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்து வரும் ‘வருங்கால’ உச்சி மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலா் லீலா நந்தன் கலந்து கொண்டு ஆற்றிய உரை:
பருவநிலை மாற்ற விவாதங்கள் பெரும்பாலும் மாசு உமிழ்வைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால், முடிவுகளை மட்டும் திணிக்காமல் எளிய தீா்வுகளை வழங்கினால் உலக நாடுகள் அனைத்தும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எரிசக்தி மற்றும் தண்ணீா் சேமிப்பு, கழிவுகளைக் குறைத்தல், நிலையான உணவு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் நாம் முறையாக செயல்பட்டிருந்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் வருடாந்திர உலகளாவிய உமிழ்வை 200 கோடி டன்கள் வரை குறைத்திருக்கலாம். பருவநிலை மாற்ற சூழலில் இன்று நாம் எதிா்கொள்ளும் பல பிரச்னைகளைத் தீா்க்கும் குறிப்பிடத்தக்க விஷயமாக இது இருந்திருக்கும்.
நிகழாண்டு தொடக்கத்தில் கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் சபையின் ஆறாவது அமா்வில், நிலையான வாழ்க்கை முறைகள் குறித்த இந்தியாவின் தீா்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் தற்போது நிலையான வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
2047-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் தூய்மை எரிசக்தித் துறை 3 முதல் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பள்ளிக் காலகட்டத்தில் இருந்து இதுதொடா்பான தொழில்நுட்பக் கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டு வருவதன் மூலம், இத்துறைகளில் இளைஞா்கள் வெற்றிகரமான மற்றும் நிலையான வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
மேலும், சா்வதேச சூரியமின்சக்தி கூட்டணி, சா்வதேச உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற உலகளாவிய அமைப்புகளை நிறுவுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பிரதமா் நரேந்திர மோடியின் ‘அன்னையின் பெயரால் ஒரு மரம்’ பிரசாரம் வாயிலாக பூமிக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட உலக மக்களை இந்தியா வலியுறுத்துகிறது. இந்த சமூகப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்றரை மாதங்களில் 75 கோடி மரக்கன்றுகள் இந்தியாவில் நடப்பட்டுள்ளன’ என்று கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...