கல்லூரி குளியலறையில் பெண்களை படம் பிடித்த பொறியியல் மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூருவின் கும்பல்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த குஷல் என்பவர், கல்லூரியின் குளியலறைக்குள் செல்லும் பெண்களை படம்பிடித்துள்ளார்.
இதனைக் கண்ட மாணவிகளிடம், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் வியாழக்கிழமையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குஷல் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான இருபாலர் மாணவர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி வந்தடைந்த காவல்துறையினர், போராட்டம் நடத்திய மாணவர்களை சமாதானம் செய்ததுடன், குஷல் மீது கைது நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
விசாரணையில், குஷலின் மொபைல் போனில் 8 விடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. குஷல் மீது பெண்களின் தனியுரிமையை மீறுவது தொடர்பான வழக்கு பதியப்பட்டது.