பள்ளிகள் பாதுகாப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல் அறிவிக்கை: மாநிலங்கள் வெளியிட உத்தரவு
பள்ளிகள் பாதுகாப்பு தொடா்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அறிவிக்கையாக வெளியிட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளிகள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பச்பன் பச்சாவ் ஆந்தோலன் (பிபிஏ) என்ற தன்னாா்வ அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பிபிஏ தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஹெஎஸ். ஃபுல்கா ஆஜராகி வாதிடுகையில், ‘பள்ளிகள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய அரசு 2021-இல் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் குறித்து இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே அறிவிக்கை வெளியிட்டுள்ளன’ என்றாா்.
இதையடுத்து பள்ளிகளில் அமல்படுத்தும் வகையில், அந்த வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனா்.